சமூக ஊடகங்களின் உதவியால் 75 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சகோதரர்களின் குடும்பங்கள்!
இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு சீக்கிய சகோதரர்களின் குடும்பங்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.
கர்தார்பூர் சாஹிப்பின் குருத்வாரா தர்பார் சாஹிப்பில் ஒரு குடும்பம் ஒன்றுகூடும் உணர்ச்சிகரமான காட்சிகள் தென்பட்டன, அங்கு அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பாடல்களைப் பாடி ஒருவருக்கொருவர் மலர்களைப் பொழிந்து சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
1947-ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவர்கள் பிரிந்தனர். பிரிந்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு சீக்கிய சகோதரர்களின் குடும்பங்கள் கர்தார்பூர் தாழ்வாரத்தில் சந்தித்து, பாடல்களைப் பாடி, ஒருவருக்கொருவர் மலர்களைப் பொழிந்து உணர்வுபூர்வமாக சமூக ஊடகங்கள் மூலம் இணைந்தனர்.
குர்தேவ் சிங் மற்றும் தயா சிங்கின் குடும்பத்தினர் வியாழக்கிழமை கர்தார்பூர் தாழ்வாரத்துக்கு மீண்டும் ஒன்றுசேர்வதற்காக வந்தனர்.
இரு சகோதரர்களும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியப் பிரிவினையின் போது மறைந்த தங்களது தந்தையின் நண்பரான கரீம் பக்ஷுடன் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள கோம்லா கிராமத்தில் வசித்து வந்தனர்.
பின்னர் பக்ஷ் சகோதரர்களில் மூத்தவரான குர்தேவ் சிங்குடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார், அப்போது இளையவரான தயா சிங் தனது தாய் மாமாவுடன் ஹரியானாவிலேயே தங்கி விட்டார். இதனால் சகோதரர்கள் இருவரும் அப்போதே பிரிந்து விட்டனர்.
பாகிஸ்தானை அடைந்த பிறகு, பக்ஷ் லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து, குர்தேவ் சிங்கிற்கு ஒரு முஸ்லீம் பெயரை (குலாம் முஹம்மது) வைத்தார்.சில ஆண்டுகளுக்கு முன்பு குர்தேவ் சிங் இறந்துவிட்டார்.
குர்தேவின் மகன் முஹம்மது ஷெரீப் ஊடகங்களிடம் கூறுகையில், பல ஆண்டுகளாக அவரது தந்தை தனது சகோதரர் தயா சிங்கின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். "ஆறு மாதங்களுக்கு முன்பு, நாங்கள் சமூக ஊடகங்கள் மூலம் சித்தப்பா தயா சிங்கைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் கூறினார், இரு குடும்பத்தினரும் மீண்டும் இணைவதற்காக கர்தார்பூர் சாஹிப்பை அடைய முடிவு செய்தனர். ஹரியானாவில் உள்ள அவர்களது மூதாதையரின் வீட்டிற்குச் செல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா வழங்குமாறு இந்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டும் இதே போல இரு சகோதரர்கள் அதாவது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த இரண்டு சகோதரர்கள் கர்தார்பூர் தாழ்வாரத்தில் மீண்டும் இணைந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 80 வயது முஹம்மது சித்திக், மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 78 வயது ஹபீப் இருவரும் ஜனவரி 2022 இல் கர்தார்பூர் தாழ்வாரத்தில் சந்தித்தனர். சமூக ஊடகங்களின் உதவியால் தான் அவர்களும் கூட மீண்டும் இணைந்தனர்.
இந்த புகழ்பெற்ற கர்தார்பூர் தாழ்வாரமானது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பையும்,இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் ஆலயத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. சீக்கிய மதத்தை நிறுவியவரும் அவர்களின் முதல் குருவுமான குருநானக்கின் இறுதி ஓய்விடமாகவும் இது இருப்பதால் சீக்கியர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இது கருதப்படுகிறது. 4 கிமீ நீளமுள்ள இந்த தாழ்வார நடைபாதையானது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இதன் தர்பார் சாஹிப்பைப் பார்வையிட இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா இல்லாத அணுகலுக்கு அனுமதி வழங்குகிறது.