புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் இந்தியாவில் சாத்தியமா?

புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் 
இந்தியாவில் சாத்தியமா?

ந்தியாவில் புல்லட் ரயில் சேவையைக் கொண்டுவரும் முனைப்பில் இந்திய ரயில்வே துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கிடையே இந்தச் சேவைக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், புல்லட் ரயிலை விடவும் அதிவேகமாக பயணிக்கும் ஹைபர்லூப் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சி மற்றும் ஆராய்ச்சியிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. 

ஒரு நாட்டின் போக்குவரத்து வசதி மற்றும் அதன் கட்டமைப்புதான் அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒர் அம்சமாகும். ஏற்கனவே நான்கு வழிச்சாலை, பல மாநிலங்களோடு இணைக்கப்பட்ட ரயில் போக்குவரத்து என மிகச்சிறந்த போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை நம் நாடு கொண்டுள்ளது. எனவே இந்தியாவில் போக்குவரத்து கட்டமைப்பின் அடுத்த முயற்சிகளான புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் வரவேற்கப்படும் சமயம் அவற்றின் தொழில்நுட்பம் பற்றி புரிந்துகொள்வோம். 

புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் இரண்டுமே அதிவேக போக்குவரத்து முறைகளாகும். இருந்தாலும் இவை இரண்டுக்கும் மத்தியில் சில வித்தியாசங்கள் உண்டு. 

புல்லட் ரயில்:

புல்லட் ரயிலை அதிவேக ரயில் என்றும் கூறுவார்கள். இது பல வருடங்களாகவே ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. சாதாரண ரயில் போக்குவரத்துக்கு எப்படி ஓடுபாதை பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோன்றுதான் புல்லட் ரயிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரத்தால் ஆற்றல் பெறும் இந்த வாகனம், மணிக்கு 220 மயில் வேகம் வரை செல்லக்கூடியதாகும். சாதாரண ரயிலை விட புல்லட் ரயில் வேகமாக செல்வதற்குக் காரணம், ஏரோ டைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட அதன் தோற்றம்தான். இதனால் சாதாரண ரயிலை விட, இதில் காற்றினால் ஏற்படும் தடை குறைவாக இருக்கிறது. 

ஹைபர் லூப் தொழில்நுட்பம்:

ஹைபர் லூப் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், புல்லட் ரயில் கட்டமைப்பை விட முற்றிலும் மாறுபட்ட புதுமையான முறையாகும். ஒரு காற்றில்லாத வெற்றிடக் குழாய் வழியாக, பயணிகள் அடைக்கப்பட்ட பெட்டியை அதிவேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணம் செய்ய வைப்பதுதான் இந்தத் தொழில் நுட்பமாகும். வெற்றிடக் குழாயினுள்ளே பயணிக்கும் பெட்டியானது Magnetic Levitation தொழில்நுட்பத்தால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உந்தப்படுகிறது. இதனால் உராய்வு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, புல்லட் ரயிலின் வேகத்தை விட இதில் வேகம் பன்மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மணிக்கு 600 மையில் வேகத்தில் ஹைபர்லூப்-ல் பயணிக்கலாம். 

ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமே அதன் வேகம்தான். வெற்றிடக் குழாயினுள் பெட்டியின் இயக்கம் இருப்பதால், காற்றினால் ஏற்படும் தடை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. இதனால்தான் புல்லட் ரயிலை விட இதன் வேகம் அதிகமாக இருக்கிறது. மேலும், உராய்வு முற்றிலும் தவிர்க்கப்படுவதால், இதன் பெட்டிகளை இயக்குவதற்கான ஆற்றலும் குறைவாகவே தேவைப் படுகிறது. புல்லட் ரயில்களைப் போலல்லாமல் ஹைப்பர்லூப் குழாய்களைப் பூமிக்கு அடியிலும் தரையிலிருந்து மேலும் அமைத்துக்கொள்ள முடியும். எனவே இதை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

என்னதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் நிறைகள் அதிகமாக இருந்தாலும், இது இன்னும் சோதனை முயற்சியிலேயேதான் இருக்கிறது. புல்லட் ரயிலைபோல முழுமையான இயக்கத்துக்கு இது இன்னும் தயாராக வில்லை. ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செலவினங்கள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தொடக்கத்திலிருந்து இதற்கான கட்டமைப்பை செய்வதற்கு மிகப்பெரிய செலவாகும். மேலும், இதன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகள் சார்ந்து பல சந்தேகங்கள் நிபுணர்களுக்கே ஏற்படுகிறது. 

இந்தியாவில் புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர் லூப் திட்டத்தின் தற்போதைய நிலை:

சென்னை ஐஐடி ஏரோநாட்டிக்கல் மாணவர்களுடன் இணைந்து, இந்திய ரயில்வேயானது  ஹைப்பர் லூப் திட்டத்தை  விரைந்து முடிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஏழு எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஹைப்பர் லூப் சேவையை எதிர்பார்க்கலாம். 

இந்தத் திட்டம் மட்டும் இந்தியாவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், மக்களுடைய பயண நேரம் வெகு குறைவாக இருக்கும் என்கிறார்கள். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லவே வெறும் 25 நிமிடங்கள்தான் ஆகும். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை 465 கிலோமீட்டர் பயணத்துரத்தை வெறும் 30 நிமிடத்தில் கடக்கலாம். 

இந்தியாவில் தற்போது முதற்கட்டமாக, ஏற்கனவே பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பாட்டிலிருக்கும் புல்லட் ரயில் சேவையைக் கொண்டு வரும் முனைப்பில் அரசு இயங்கி வருகிறது. அடுத்ததாக இன்னும் பத்து ஆண்டுகளில் ஹைப்பர் லூப் சேவையையும் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com