131 கிலோ எடையில் ஸ்கர்ட் வடிவில் கேக் சுவிட்சர்லாந்து பெண் கின்னஸ் சாதனை!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரொட்டி மற்றும் கேக் தயாரிப்பாளரான நடாஷா கோலின் கிம் ஃபா லீ ஃபோகஸ், உலகிலேயே மிகப்பெரிய கேக் ஆடை தயாரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உலக திருமண நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வுக்காக நடாஷா 131.15 கிலோ எடையுள்ள பெண்கள் அணியும் கேக் ஆடையை தயாரித்து காட்சிப் படுத்தினார்.
கேக்கினால் தயாரிக்கப்பட்ட ஆடையை ஒரு பெண் அணிந்து வலம் வந்தார். பின்னர் அந்த கேக் வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
வழக்கமாக கேக் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டே நடாஷா இந்த கேக் ஆடையை தயாரித்திருந்தார். கேக்கின் எடை 131.15 கிலோ. சுற்றளவு 4.15 மீட்டர். உயரம் 1.57 மீட்டர். குறுக்களவு 1.319 மீட்டர். பெண்கள் அணியும் ஸ்கர்ட் போல் தயாரிக்கப்பட்ட கேக் ஆடைக்கு ஆதரவாக அலுமினிய பிரேம் பொருத்தப்பட்டிருந்தது. அந்த பெண் கேக்
ஆடையுடன் நடப்பதற்கு வசதியாக பலகையில் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தன. ஸ்கர்டின் மேல் பகுதி சர்க்கரை பாகு மூலம் தயாரிக்கப்பட்டிருந்த்து.
நிகழ்ச்சியின் முடிவில் ஸ்வீட்டி கேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நடாஷாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் நான் ஸ்வீட்டி கேக்ஸ் நிறுவனத்தை தொடங்கினேன். வழக்கம்போல் கேக் மற்றும் ரொட்டி தயாரித்து விற்பனை செய்து வந்தேன். திருமணத்துக்கான கேக் வடிவமைத்தும் விற்று வந்தேன். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. திருமணத்திற்கு அணியும் ஆடையைப் போலவே கேக் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இந்த ஆடையை தயாரிப்பதற்கு எனது மகள் எல்லியையே மாடலாக வைத்துக் கொண்டேன். இந்த முயற்சி முதலில் எனக்கு சவாலாகவே இருந்தது. ஆனால், கடைசியில் எனது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. கின்னஸ் சாதனை படைத்தது பெருமையாக இருக்கிறது என்கிறார் நடாஷா.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடப்பட்ட இந்த விடியோவை 1.3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
கேக் எங்கே? பெண் அணிந்திருக்கிறார் என்று பலரும் விமர்சித்துள்ளனர். இவ்வளவு அதிக எடையுடன் கூடிய கேக் ஆடையைச் சுமந்து அந்த பெண் எப்படி நடந்து வந்தார் என்று பலரும் வியப்புடன் கேள்வி எழுப்பினர்.