நிறைய குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரொக்கப் பரிசும் சலுகைகளும்! பிரதமர் அறிவிப்பு!

நிறைய குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரொக்கப் பரிசும் சலுகைகளும்! பிரதமர் அறிவிப்பு!

Published on

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் அந்த நாடு விரைவில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது ஜப்பான் முன்னேறிய நாடாக உள்ளது. எனினும் மக்கள் தொகையில் அந்த நாடு மிகவும் பின்தங்கியுள்ளது. மக்கள் தொகையில் இப்போது பெரும்பாலானவர்கள் முதியவர்களாக உள்ளனர்.

வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அந்த நாடு கடும் சிக்கலை எதிர்நோக்கும் அபாயம் உள்ளது. அங்கு பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகை 12.5 கோடியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மக்கள் தொகை 8,00,000 குறைந்துள்ளதாம். கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவாக டோக்கியோ நகரில் மட்டும் மக்கள் தொகை 40,000 குறைந்துள்ளது. அங்கு 65 வயதுக்கு மேலானவர்கள் 30 சதவீதமும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 சதவீதமும் உள்ளனர்.

இதனிடையே குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபகாலமாக குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜப்பான் அரசு வலியுறுத்தி வருகிறது. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கு ரொக்கப் பரிசும், சலுகைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், குழந்தைகளை வளர்க்க அதிகம் செலவிட வேண்டியிருப்பதால் பெற்றோர் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து கவலை வெளியிட்ட பிரதமர் கிஷிடா, இப்போது மக்கள் தொகையை அதிகரிக்காவிட்டால் பின் எப்போதும் அதிகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இதற்காக நீண்டநாள் காத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிதாக திருமணம் செய்துகொள்பவர்கள் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மேலும் சில சலுகைகளை அளிக்கும் திட்டத்தை ஜூன் மாதம் அறிவிக்க இருக்கிறார்.

ஜப்பானை அடுத்து சீனா, தென்கொரியாவிலும் இப்போது மக்கள் தொகை குறைந்துவருகிறது. சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2022 இல் மக்கள் தொகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com