சீனா இரண்டாவது முறையாக பொருளாதார சரிவை சந்தித்துள்ளது

சீனா இரண்டாவது முறையாக பொருளாதார சரிவை சந்தித்துள்ளது

கொரோனாவைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், சீனப் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு சீனா.

சீனாவில் பெருந்தொற்று காரணமாக `ஜீரோ கோவிட் கொள்கை'யால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால், தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பை சீனா சந்தித்தது.

இந்நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தன. என்றாலும் உக்ரைன் போர் பாதிப்பு, சர்வதேச பொருளாதார நிலை காரணமாக சீன தயாரிப்புகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரிதாக விற்பனையாகவில்லை.

சீனாவின் மொத்த உள்நாட்டுப் பொருளாதரத்தில் ரியல் எஸ்டேட் துறை முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட், வீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு சீனாவின் வளர்ச்சியை பாதித்தது.

மின்பற்றாக்குறை காரணமாக முக்கியமான தொழில் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் உற்பத்தி பெரிதும் பாதித்தது. டென்சென்ட், அலிபாபா போன்ற நிறுவனங்கள் முதன்முறையாக அதன் வருவாயில் இழப்பைச் சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலைகளை இழந்தனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் மதிப்பு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதால், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை அதிகரித்தது.

இத்தைகைய காரணங்களால் கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3% அளவாக சரிவைக் கண்டது. சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக் குறைந்த அளவாக 2.3% பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது.

சீனா கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது அதிகாரப்பூர்வமான இலக்கான 5.5 சதவிகிதத்திற்கும் குறைவு என்று சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.

தற்போதைய சூழலில், சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று அவரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்து ரகுராம் ராஜன் கூறுகையில், ''இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக விளங்கினாலும், உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது என்பதால், நிலைமை மாறலாம்.

சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. என்றாலும், வளர்ந்துவரும் நாடாக இருக்கும் இந்தியா, மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சீன பொருளாதாரம் மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com