கொரோனா
கொரோனா

சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவியது! அமெரிக்கா எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே கருத்து!

Published on

கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பது குறித்து முதல் முறையாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ புலனாய்வு அமைப்பு பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தகவலால் கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது என்கிற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது.

உலக அளவில் முன்னணியில் இருக்கும் வைரஸ் ஆய்வகமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் (Wuhan Institute of Virology) இருந்து 40 நிமிட பயணத்தில் கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வையும் இந்த ஆய்வகம் நடத்தியிருந்தது. சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் பிறப்பிடத்தை உலக நாடுகள் கண்டறியும் முயற்சிகளை எடுத்தும் வரும் நிலையில், அவற்றை தடுக்கவும், குழப்பம் ஏற்படுத்தவும் சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக எஃப்.பி.ஐ. இயக்குநர் கிரிஸ்டோபர் ரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனாவின் தொடக்கம் தொடர்பான விவகாரத்தில் சீனா மிக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருந்த சில தினங்களிலேயே இத்தகைய கருத்தை கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com