குரான் எரிப்பு விவகாரம்: நடவடிக்கை எடுக்க டென்மார்க், சுவீடன் முடிவு!

குரான் புனித நூலை எரித்த ராஸ்மஸ் பலுதான்
குரான் புனித நூலை எரித்த ராஸ்மஸ் பலுதான்

குரான் எரிப்பு விவகாரத்தில் இசுலாமிய நாடுகளின் எதிர்ப்பு காரணமாக, டென்மார்க், சுவீடன் அரசுகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளன.

நார்டிக் பகுதி நாடுகளான டென்மார்க், சுவீடன் இரண்டுமே குரான் எதிர்ப்பு விவகாரத்தால் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து வருகின்றன. குறிப்பாக, இசுலாமிய நாடுகள் இரண்டு நாடுகளின் அரசுகள் மீதும் கடுமையான அழுத்தத்தை உண்டாக்கி வருகின்றன. அதைச் சமாளிக்க முடியாமல் இப்போது டென்மார்க், சுவீடன் அரசுகள் குரான் விவகாரத்தில் இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளன.

நேற்று ஞாயிறன்று சுவீடன் அரசைத் தொடர்புகொண்ட துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபைடன், குரான் எரிப்பு தொடர்பான நிகழ்வுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோபியாஸ் வில்ஸ்ட்ராமிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் குரானை எரிக்கும் சம்பவங்களை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அப்போது ஹக்கன் காட்டமாகக் குறிப்பிட்டார்.

தாங்கள் ஏற்கெனவே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனையில் இறங்கிவிட்டதாக சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தெரிவித்துள்ளார். சுவீடனின் தேசியப் பாதுகாப்பை வலிவூட்டவும் உலகமெங்கும் இருக்கும் சுவீடிய மக்களைப் பாதுகாக்கவும் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க் பிரதமர் மெட்டெ பிரெடரிக்சனுடன் உல்ஃப் இதுபற்றிப் பேசியுள்ளதாக சுவீடன் அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. முன்னதாக, குரான் எரிப்பு சம்பவத்தால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி உல்ஃப் கவலையை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, நேட்டோ அமைப்பில் உறுப்புநாடாக சுவீடன் இணைவதை ஆதரிக்கும் துருக்கி அரசு இதில் விமர்சனம் செய்திருப்பதை, உல்ஃப் அரசாங்கம் முக்கியமாக எடுத்துக்கொண்டுள்ளது.

சுவீடனை அடுத்து நேற்று டென்மார்க் அரசும் குரான் விவகாரம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

”சில பேர் குரான் நூல்களை எரிப்பது தீவிரமான குற்றமாகக் கருதப்படும். இப்படிப்பட்ட சிலரின் செய்கையானது ஒட்டுமொத்த டென்மார்க்க்கின் மதிப்பீடுகளை வெளிப்படுத்த வில்லை.” என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாக்கெ ரஸ்முசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகள், பண்பாடுகள், மதங்கள் இழிவுபடுத்தப்படும் தருணங்களில் குறிப்பாக இவற்றால் டென்மார்க் அரசுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகள் உண்டாக்கப்படுமானால், அரசாங்கம் இதில் தலையிடும்; இது பாதுகாப்பு தொடர்பானதும்கூட என்று டென்மார்க் அரசு கூறியுள்ளது.

இதேசமயம், அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள கருத்து சுதந்திர உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குள் செயல்படுவோம் என்றும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com