எடை குறைப்பிற்கு சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம்: WHO எச்சரிக்கை!

எடை குறைப்பிற்கு சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம்: WHO எச்சரிக்கை!

அஸ்பார்டேம், நியோடேம், சாக்கரின், ஸ்டீவியா, சுக்ரோலோஸ் மற்றும் சைக்லேமேட்ஸ் போன்ற சர்க்கரை அல்லாத பல்வேறு இனிப்புகளின் வெவ்வேறு விதமான தொகுப்புகள் இன்று நாம் உண்ணும் அனைத்து உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இனிப்புகள் பொதுவாக தனித்தனியாக விற்கப்படுகின்றன என்பதுடன் சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றைப் பொதுவாக NSS என்று குறிப்பிடுகிறார்கள். அவற்றுக்கான விற்பனை விளம்பரங்களில் அவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதாகவும், எடையை நிர்வகிக்க அவை உதவுகின்றன என்றும் நம்பப்படுகின்றன.

ஆனால், ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பைத் தடுக்கவும், தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் சர்க்கரை அல்லாத இனிப்புகளை ( non-sugar sweeteners- NSS) உட்கொள்வதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு (WHO) தனது சமீபத்திய புதிய கண்டுபிடிப்பொன்றில் அறிவுறுத்தியுள்ளது. NSS குறித்த WHO இன் புதிய வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக இந்தப் பரிந்துரை உள்ளது.

WHO இன் வழிகாட்டுதல்களின்படி, சர்க்கரை அல்லாத இனிப்புகள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடைக் கட்டுப்பாட்டில் நீண்ட கால நன்மைகளை வழங்காது எனவும் அதற்கு பதிலாக, அத்தகைய NSS இன் பயன்பாடானது டைப் 2 நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் பெரியவர்களில் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் ஆபத்து உட்பட "விரும்பத்தகாத விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்றும் சமீபத்திய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக புதிய செய்தியொன்று வெளிவந்திருக்கிறது.

"சர்க்கரை உட்கொள்ளக்கூடாதவர்கள் NSS ஐ மாற்றாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட்டு அதற்கான வேறு மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்.அதாவது ஆபத்தற்ற இயற்கையான பழங்கள், ஃப்ரெஷ்ஷாக பழங்களில் இருந்து பெறப்படும் சாறு, தேன் போன்ற இனிப்பான இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தங்களது ஔடலின் இனிப்புத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதைப் பற்றி மக்கள் பரிசீலிக்கத் தொடங்க வேண்டும்,”

-என்று WHO ன் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான இயக்குனர் பிரான்செஸ்கோ பிராங்கா கூறினார்.

NSS எப்போதுமே "அத்தியாவசியமான உணவுக் காரணி" அல்ல, அத்துடன் அதற்கெனத் தனியாக எந்த ஊட்டச்சத்து மதிப்பும் இல்லை, எனவே அவற்றின் பயன்பாட்டை மக்கள் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்து விடுவது நல்லது என்றும் கூட WHO இயக்குனர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்தப் பரிந்துரை பொருந்தும் என்று WHO தெரிவித்துள்ளது.

உணவுபொருட்கள் விஷயத்தில் தான் இந்த வழிகாட்டு நெறிமுறை பொருந்துமே தவிர தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் மருந்துகள், தோல் கிரீம்கள் போன்ற சுகாதார தயாரிப்புகளில் NSS ஐப் பயன்படுத்தலாம் என்பதையும் கூட உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

WHO இன் கூற்றுப்படி, அதன் வழிகாட்டுதலானது "வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை நிறுவுதல், உணவுத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் உலகளவில் தொற்று அல்லாத பிற நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருக்கிறது.

எனவே இனிவரவிருக்கும் நாட்களில் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை ஏற்று NSS பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு அதற்கான மாற்று வழிமுறைகளை உபயோகப்படுத்த பழகிக் கொள்வதே ஆரோக்யமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com