அமெரிக்காவில் டிரைவர் இல்லா கார்கள் செய்யும் அட்டூழியம்.

அமெரிக்காவில் டிரைவர் இல்லா கார்கள் செய்யும் அட்டூழியம்.

மெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ தெருக்களில் டிரைவர்கள் இன்றி சுற்றிவரும் ஆட்டோமேட்டிக் ரோபோ டேக்ஸிகள் மக்களுக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். இந்த ஆட்டோமேட்டிக் டாக்சிகள் பெரிதும் தொந்தரவு ஏற்படுத்துவதால் அங்கே கிளர்ச்சி வெடித்துள்ளது. 

எந்த விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாமல் சான்பிரான்சிஸ்கோ தெருக்களில் சுற்றித் திரியும் வாய்மோ மற்றும் குரூஸ் நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் கார்களை, மக்களே தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி இந்த டிரைவர்லெஸ் கார்கள் என்னதான் செய்கிறது? 

சான்பிரான்சிஸ்கோ தெருக்களில் டிரைவர்கள் இல்லாமல் தானாகவே இயங்கும் ஆட்டோமேட்டிக் கார்கள் அடிக்கடி தெருக்களில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அசௌகரியத்தை உணர்கிறார்கள். அங்கே ஆள் இல்லா டாக்ஸிகள் அதிக அளவில் சுற்றித் திரிவதால், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள் Safe Street Rebels என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்து புரட்சிப் படையைத் திரட்டி ரோபோ கார்களை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். 

இந்த கார்களை எங்கும் நகராமல் அப்படியே நிறுத்துவதற்கு, சாலையில் இருக்கும் ஆரஞ்சு நிற ட்ராபிக் கோன்களை அந்தக் காரின் முன்பக்க பேனட்டில் வைத்துவிடுகின்றனர். இப்படி செய்யும் போது, ரோபோ கார்கள் கேமராவின் உதவியோடு இயங்குவதால், கேமராவில் எதிரே தடை இருக்கிறது என்பது பதிவாகி, கார் எங்கும் நகராமல் அப்படியே நின்றுவிடும். அப்படி என்ன இந்த கார்கள் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டது என நீங்கள் கேட்டால், குறிப்பாக சான்பிரான்சிஸ்கோ தெருக்களில் உள்ள பல மின்கம்பங்களை இது சேதப்படுத்தி உள்ளது. மேலும் பொதுப் பேருந்துகள் மீது மோதுவது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல் இருப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்ததால், பொதுமக்கள் பொறுமை இழந்துவிட்டனர்.  

இதுகுறித்து பலமுறை ஆட்டோமேட்டிக் கார் நிறுவனத்திற்கு புகார் அளித்தபோதும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்களே களத்தில் இறங்கி இந்த கார்களை முற்றுகையிடத் துவங்கிவிட்டனர். வீதிகளில் சுற்றித் திரியும் ஆட்டோமேட்டிக் கார்களை வழிமறித்து அதன் மீது ட்ராஃபிக் கோன்களை வைக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. 

"ட்ராபிக் கோன்களை பயன்படுத்தி, டிரைவர்லெஸ் கார்களை எளிமையாக யூனிகார்னாக மாற்றலாம்" என கேலியாக சித்தரித்து வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் அனைவரையும் இதே போல செய்யும்படி கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com