பசிபிக் கடலின் விசித்திர ஓட்டையால், உலகம் முழுவதும் நிலவி வரும் மிகப்பெரிய பூகம்ப அச்சம்!
பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு விசித்திர ஓட்டையால் அமெரிக்காவின் பெரும்பகுதி ஆபத்தில் உள்ளதாக சமீபத்தில் வந்த செய்தி ஒன்று எச்சரிக்கிறது.
அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக உறுதியாகி இருக்கும் இந்த நிலையில் அதனால் இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமா என்று அறிந்து கொள்ள முயன்ற போது சுற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவர் தெரிவித்த உண்மைகள் அதிர்ச்சியைத் தரக்கூடியதாக உள்ளன.
கடந்த ஃபிப்ரவரி மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா நாடுகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின. அங்கு சுமார் 57,000 மக்கள் நிலநடுக்கத்திற்கு பலியானதோடு பல லட்சம் மக்கள் வீடு, வாசல். சொந்தங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலி போல இந்தியா உட்பட மேலும் பல நாடுகளில் சுமாரான அளவில் நிலநடுக்க அதிர்வுகள் அவ்வப்போது எழுந்து பொதுமக்களை அதிர்ச்சியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இதுவரை பார்த்திராத அளவில் பேரழிவை உலகம் எதிர்கொள்ளவிருக்கிறது என்று விஞ்ஞானிகளும், சர்வ தேச ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்திருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
அமெரிக்காவின் ஓரேகான் பகுதியில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் இருந்து காற்றுக்குமிழ்கள் வெளிவருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக விரிவாக ஆராய்ச்சி நடத்திய வாஷிங்டன் பலகலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கு அடியிலுள்ள பரப்பில் ஓட்டை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் அது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதில் கிடைத்த முடிவுகளை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிட்டுள்ளனர்.
(Pythia's Oasis)பைதியாஸ் ஓயாசிஸ் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விசித்திர ஓட்டையில் இருந்து சுத்தமான அதே சமயம் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூடான திரவம் ஒன்று வெளியாகிக் கொண்டிருப்பது அதிர்ச்சியூட்டியுள்ளது. இதன் காரணமாக ரிக்டர் அளவுகோலில் 9 க்கும் அதிகமான மிகப்பயங்கரமானதொரு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து மேலும் விளக்கமான தகவல்களை அறிய மண் மற்றும் உயிரியல் சுற்றுச்சூழல் ஆர்வலரான இஸ்மாயில் அவர்களை அணுகிய போது அவர் அளித்த பதில் இதோ...
இது போன்ற ஓட்டைகள் கடல் முழுவதும் பல இடங்களில் உள்ளன. அதனால் பல இடங்களும் பிரச்சனையில் இருப்பது உண்மை தான். ஆனால், இங்கு அந்த ஓட்டையில் இருந்து திரவம் வெளிவருவதால் அந்தப் பகுதியில் இருக்கும் டெக்டோனிக் பிளேட்ஸ் பகுதி நிலைகுலைந்து பூமிக்கு அடியில் சமநிலை குலையலாம். இதனால் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏறபட வாய்ப்பு இருக்கிறது. 2004 ல் சுனாமி வந்த போது கூட இங்கு நமது இந்தியப் பகுதிகளில் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. அங்கு சுமத்ராவில் கடலுக்கு அடியில் நேர்ந்த
பூகம்பத்தின் அதிர்வு தான் இங்கு நமது பகுதிகளிலும் எதிரொலித்தது. அதன் துயரங்களை நாம் அனுபவித்தோம். அதே போலத்தான் இப்போதும், பசிபிக்கடல் ஓட்டையால் அங்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு விடாது. அது உலகின் எல்லாப் பகுதிகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தத் தான் செய்யும். இதற்கு தனி ஒரு மாநிலமோ, நாடோ மட்டும் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. உலகம் முழுவதுமாக சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டாக வேண்டும்.
- என்றார் அவர்.
பசிபிக் கடல் ஓட்டையால் உலகம் முழுக்க பாதிப்பு ஏறபடுவது ஒருபுறம் இருக்க அதனால் பூகம்பம் ஏற்பட்டால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே மொத்தமாக அழிந்து விடக்கூடிய சூழல் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்து வருவது அதிர்ச்சியளித்துள்ளது.
நியூஸ் சோர்ஸ்: தந்தி தொலைக்காட்சி