எரிக் கார்செட்டி: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் மீதான வலுவான குற்றச்சாட்டுகள் என்ன?

எரிக் கார்செட்டி: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் மீதான வலுவான குற்றச்சாட்டுகள் என்ன?

ஒருவழியாக இந்தியாவுக்கான தனது தூதரை அமெரிக்கா அறிவித்துள்ளது. அவர் எரிக் கார்செட்டி, முன்னாள் லாஸ் ஏஞ்சலஸ் மேயர்.

ஜோ பைடன் விசுவாசியான கார்செட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராகக் காணப்பட்டார். இருப்பினும், அவரது ஒன்பது ஆண்டுகால மேயர் பதவியின் கடைசி ஆண்டுகள் ஊழல்களால் நிறைந்து தழும்பின என்கின்றன அமெரிக்க ஊடகச் செய்திகள்.

இது அவருக்கு பைடன் அமைச்சரவையில் இணைந்திருக்க கிடைத்த வாய்ப்பை ரத்து செய்தது. அத்துடன் அவரது தூதர் முயற்சியையும் கிட்டத்தட்ட தடம் புரளச் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் முன்மொழியப்பட்ட இந்த பதவியானது இப்போது தான் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எரிக் கார்செட்டியை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக தேர்வு செய்ய அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்தாலும். அவருக்கு எதிராக வாக்களித்த காரணிகளை விவாதிக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக வாக்களித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிக் கார்செட்டி குறித்த கூடுதல் விவரங்கள்?

52 வயதான எரிக் கார்செட்டி சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள நகரமொன்றில் பிறந்தார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் BA மற்றும் MA பட்டம் பெற்றதாக கார்செட்டியின் இணையதளம் கூறுகிறது. அவர் ஆக்ஸ்போர்டு மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். ஆக்ஸிடென்டல் கல்லூரி மற்றும் யுஎஸ்சி ஆகியவற்றில் சில காலம் கல்வி கற்பித்தார். பின்னர் அவர் 12 ஆண்டுகளாக அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார் என்று அவரது வலைத்தளம் கூறுகிறது. அவருக்கு எமி எலைன் வேக்லேண்ட் எனும் மனைவியும் ஒரு மகளும் உள்ளார்.

அமெரிக்காவின் 100 வருட வரலாற்றில் இளம்வயதில் மேயரான முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயாராக தேர்வு செய்யப்பட்டவர், 2022 வரை அப்பதவியில் இருந்தார். அமெரிக்க மேயராகும் முதல் யூதரும் இவர்தான். 2006 முதல் 2012 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சிலின் தலைவராக இருந்தார்.

கொரோனா காலத்தில் இவரது சில பணிகள் மக்களுக்கு தேவையாக அமைந்தது. ஆனால் வீடுகளற்ற மக்கள் அதிகமானது தொடர்பாக இவர் விமர்சிக்கப்பட்டார். கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யபட்டபோது, இவர் அமெரிக்க காவல்துறைக்கு ஆதரவாகவும், அவர்களை காப்பாற்றவும் முயற்சிகள் எடுத்ததால், அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கபட்டார். மேலும் இவர் மீது பல ஊழல் புகார்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சில விஷயங்களில் பாராட்டும் கிடைக்காமல் இல்லை... இவர் 15 டாலர் குறைந்தபட்ச ஊதியம் வழங்கியதற்காகப் பாராட்டப்பட்டார்.

எரிக் கார்செட்டி மீதான குறைகளில் இவரது உதவியாளர்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, கார்செட்டி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது அவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது.

கார்செட்டியின் உதவியாளர் ரிக் ஜேகப்ஸ் மீது வைக்கப்படும் புகார் என்ன?

எரிக் கார்செட்டியின் முக்கிய உதவியாளர் ரிக் ஜேகப்ஸ். காவல்துறை அதிகாரி மற்றும் எரிக் கார்செட்டியின் பாதுகாவலரான மேத்தியூ கர்சா, ரிக் ஜேகப்ஸ் மீது பாலியல் புகாரை முன்வைத்து, 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரில் ரிக் ஜேகப்ஸ், தன்னிடம் மிகவும் மோசமான முறையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று மேத்தியூ கர்சா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரிக் ஜேகப்ஸ் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனால் எரிக் கார்செட்டி, இது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறுகிறார். ஆனால் இவர் தகவல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மேத்தியூ கர்சா தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கான தேர்வுக்கு செனேட் கமிட்டியால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எரிக் கார்செட்டி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்க செனட்டர் சுக் கிரேஸ்லி, இவரின் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் இதற்கான காரணமாக ரிக் ஜேகப்ஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றத்தை கருத வேண்டும் என்றும் சுட்டிகாட்டினார். அத்துடன் சுக் கிரேஸ்லியின் அறிக்கையின்படி , ரிக் ஜேகப்ஸ் தொடர்ந்து பணியாளர்களிடையே பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், இனவெறியோடு பேசியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

இதனால் தான் எரிக் கார்செட்டியின் தேர்வு சுமார் இரண்டரை ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்படிருந்தது.

இந்நிலையில் எரிக் கார்செட்டியின் முன்னால் தகவல் தொடர்பு இயக்குநர் நயோமி செலிகன் “ தூதராக பதவியேற்க அவர் தகுதியற்றவர். இந்த உலகத்தில் உள்ள எந்த அரசியல் பதவிகளிலும் அவர் பணியாற்ற தகுதியற்றவர்” என்று சி.என்.என் என்ற ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

இப்படி பொறுப்பற்ற ஒரு நபரையா ஜோ பைடன் இந்தியாவுக்கான அமெரிக்கத்தூதராக அனுப்பவிருக்கிறார்?! எனும் கேள்வி உலக நாடுகளிடையே மட்டுமல்ல இந்திய ஊடக வட்டாரத்திலும் வலுத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com