மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

ந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் கலவரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மைய்தேயி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கு பழங்குடியின சமூகமான குக்கி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பான்மை சமூகமான மைய்தேயி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து கிடைத்து விட்டால் எங்கள் நிலப்பகுதியில் அவர்களுக்கு இடம் வாங்க உரிமை கிடைத்து விடும், அதனால் எங்களுக்கான இடங்கள் பறிபோகும் என்று குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை மிகப்பெரிய வன்முறையாக மாற்றப்பட்டது. வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஸ்டிராஸ்பார்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தில் சிறுபான்மையின மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மக்களினுடைய சொத்துக்கள், உடமைகள் சூறையாடப்பட்டுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் மனித உரிமை மீறல் என்றும் இந்த வன்முறையில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக அரசின் தேசிய இன வாத பிரிவினைக் கொள்கைகள் இந்த வன்முறைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய அரசும் மணிப்பூர் மாநில அரசும் வன்முறையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் பாகுபாடான கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும். மணிப்பூர் மாநில மக்களுக்கு இந்திய அரசும் மணிப்பூர் மாநில அரசும் தீவிரமான உதவியை செய்யவேண்டும். அங்கு சுதந்திர அமைப்புகளை கொண்ட மனித உரிமை விசாரணை நடைபெற வேண்டும். மேலும் இணைய வசதி ஏற்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள், சர்வதேச பார்வையாளர்களை மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், மேலும் மணிப்பூரில் நீண்ட நாளாக அமலில் உள்ள சர்ச்சைக்குரிய சட்டமான பாதுகாப்பு படையினருக்கான சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து இருப்பது, இந்திய பிரதமர் பிரான்ஸ் சென்றிருக்கக்கூடிய நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக மணிப்பூர் கலவரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இது காலனி ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com