
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி, இந்த வாரம் ஏயோலஸ் என்ற செயற்கைக்கோளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கவிருக்கிறது.
ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளியில் தனது பயன்பாட்டை முடித்துக்கொண்ட 'ஏயோலஸ்' என்ற செயற்கைகோளை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரும் பணியைத் தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் பூமிக்கு கொண்டு வரும்படி வடிவமைக்கப்படாத செயற்கைக்கோளை திரும்பக் கொண்டு வருவதற்கான புதிய பாதையை இது துவங்கும் எனச் சொல்லப்படுகிறது.
கிரேக்க புராணங்களில் வரும் Aeolus (காற்றைக் காப்பவர்) என்று பெயரிடப்பட்ட விண்கலம் 2018-ல் ஏவப்பட்டது. இதுதான் உலகிலேயே காற்றின் வேகம் மற்றும் திசையை நேரடியாக அளவிடும் முதல் செயற்கைக்கோளாகும். இது விஞ்ஞானிகள் உலகளாவிய வானிலை முன்னறி விப்புகளை தெரிந்துகொள்ள உதவியது.
இந்த செயற்கைக்கோள் அதன் பணியை முடித்து பின்னர், கடந்த ஜூன் 19ஆம் தேதி சுமார் 320 கிலோமீட்டர் உயரத்திலிருந்து கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் ஜூலை 24 திங்கட்கிழமை அன்று 280 கிலோமீட்டர் உயரத்தை எட்டியவுடன், ESA மிஷன் ஆபரேட்டர்கள் Aeolus-ன் கடைசி எரிபொருளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோளை மெதுவாக பூமிக்கு கொண்டுவரும் முயற்சியின் முதற்கட்டத்தை செய்து முடித்தனர். இத்திட்டத்தின் இறுதி கட்ட சுழற்சி ஜூலை 28ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஆப்பரேட்டர்களால் செயற்கைக்கோளை 150 கிலோமீட்டர் உயரத்திலிருந்து 120 கிலோமீட்டர் வரை மட்டுமே வழிநடத்த முடியும். அதன் பிறகு செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையத் தொடங்கும். செயற்கைக்கோள் சுமார் 80 கிலோமீட்டர் உயரத்தை அடைந்ததும் பெரும்பாலான செயற்கைக் கோள்களைப் போலவே எரிந்த நிலையில் பல துண்டுகளாகப் பிரிந்து பூமியை அடையலாம்.
இந்த செயல்முறை அனைத்தும் திட்டப்படி நடந்தால், கண்ட்ரோலர்கள் நிர்ணயித்தபடி எல்லா பாகமும் அட்லாண்டிக் பெருங்கடலில் விழும். இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி அட்லாண்டிக் பெருங்கடல் தான் விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான சிறந்த இடம் என்று கூறப்படுகிறது.
அங்குதான் செயற்கைக்கோள் மீண்டும் பூமிக்குள் நுழையும்போது ஏற்படும் பொதுவான ஆபத்து குறைவு என்றும், இதனால் பூமிக்கு ஏற்படும் ஆபத்து 42 சதவீதம் வரை குறையும் என்றும் சொல்கின்றனர்.