விண்வெளியில் திருமணம் செய்ய ஆசையா? ரூ.1 கோடி கட்டணம்!

விண்வெளியில் திருமணம் செய்ய ஆசையா? ரூ.1 கோடி கட்டணம்!

தொழில்நுட்ப உலகத்தில் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம். இன்றைய இளைஞர்கள் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தைக் கொண்டாட விரும்புகின்றனர். திருமணத்திற்கான இடத்தை தேர்ந்தெடுப்பது முதல் ஆடை அணிகலன், உணவு என அனைத்திலுமே புதுமையான முறைகளை அறிமுகப்படுத்துகின்றனர்.

பணக்காரர்கள் தங்களுடைய பணபலத்தைக் காட்டும் வகையில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைப்பதும் அரங்கேறி வருகிறது. மலை உச்சியில், நடுவிமானத்தில், நடுக்கடலில் என வித்தியாசமான சூழல் கொண்ட இடங்களில் திருமணம் செய்வதும் வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் தற்போது யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியைத் தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணமாக இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. “ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்” என்று அழைக்கப்படும் புதிய நிறுவனம் இந்த வசதியை வழங்குகிறது.

புதிய முறையில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் இந்த கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த ராட்சத பலூனில் பல்வேறு இடங்களில் அதிக ஜன்னல்கள் உள்ளன.

பூமியிலிருந்து ராட்சத பலூனில் கிளம்பும் ஜோடிகள் சரியாக ஒரு லட்சம் அடி உயரத்திற்குச் சென்றதும் விண்வெளியில் இருந்தபடி பூமியின் இயற்கை அழகைக் கண்டு ரசித்தபடியே திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் நடந்து முடிந்ததும் திருமண தம்பதிகள் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள். விண்வெளியில் திருமணம் செய்துகொள்வதற்கு இதுவரை ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளார்களாம். இந்த விண்வெளி திருமண சேவையை அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கி வைக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com