ஃபிப்ரவரி 14 உடல் உறுப்புகள் தான தினம்!
காதலர் தினம் மட்டும் அல்ல… இன்னொரு சிறப்பும் ஃபிப்ரவரி 14ஆம் தேதிக்கு இருக்கிறது.
இதைக் கொடையாளர் தினம் (Donor Day) என்கிறார்கள். கொடை என்றால் பொன்னோ பொருளோ தருவது அல்ல. உடலுறுப்புகளைத் தானம் செய்யும் தினமாக இதைக் கொண்டாடுகிறார்கள். 1998ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது இந்தத் தினம்.
ஒருவர் இருந்தபோது அவர் உயிர்வாழ உறுதுணையாக இருந்த அவரது உறுப்புகள், அவர் இறந்தவுடன் மண்ணில் புதையுண்டோ அல்லது நெருப்புக்கு இரையாகியோ வீணாவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. ஆனால் இறந்த பின்னரும் ஒருவரது உடல், தேவைப்படும் பலருக்கும் பொருத்தப்பட்டு, அவர்கள் வாழ்வில் புத்துயிர் ஊட்ட முடியும் என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் இந்த, ‘உடல் உறுப்பு தான தினம்’ உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
உடல் உறுப்புகள், திசுக்கள், மஜ்ஜைகள், ரத்தம் மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகிய ஐந்தையும் தேவைப்படும் பிறருக்கு நிச்சயம் அளிக்க முடியும். நாம் உயிருடன் இருக்கும்போது ரத்த தானம் செய்வது மிக எளிது. ஓர் உயிரைக் காப்பாற்ற இது உதவும். நமது உடலின் பல பகுதிகளை நாம் இறந்த பிறகு தானமாகத் தர முடியும்.
இன்றைய தினத்தில் பரவலாக ரத்த தானம் செய்வதில் தனி நபர்களும், நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விபத்துக்கு ஆளாகி மூளைச் சாவை அடைந்துவிட்டவர்களின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தச் சம்மதிக்கும் போற்றத்தக்க நிகழ்ச்சிகளையும் ஆங்காங்கே கண்டிருப்பீர்கள் அல்லவா?
’சென்னையில் ஒரு நாள்’ திரைப்படம்கூட இந்தக் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டதுதான். கமலஹாசன் தன்னுடைய காலத்துக்குப் பிறகு தன்னுடைய உடலையே தானமாக அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்க விஷயம். நீங்களும் ஏன் இந்தப் புனித தானத்தைச் செய்யக் கூடாது?