பறிபோகும் வேலை, வீட்டுக்கு அனுப்பும் நிறுவனங்கள்...கூகிள் நிறுவனமும் ஆரம்பித்துவிட்டது!

பறிபோகும் வேலை, வீட்டுக்கு அனுப்பும் நிறுவனங்கள்...கூகிள் நிறுவனமும் ஆரம்பித்துவிட்டது!

உங்களுடைய சிறப்பான சேவைக்கு மிக்க நன்றி. உங்களுக்கு கூகிள் நிறுவனம் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று உருக்கமாக ஒரு மெயில் அனுப்பி, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார், கூகிள் நிறுவனத்தின் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை.

கூகிள் நிறுவனத்தின் தலைமைச் செயலகமான ஆல்பாபேட், 12 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கப்போவதாக நேற்று அறிவித்து உலகெங்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் கூகிள் ஊழியர்களில் ஏறக்குறைய 6 சதவீத பேர் வேலையிழக்கிறார்கள்.

கொரானா தொற்றுக்கு பின்னர் பல்வேறு துறைகளில் வேலையிழப்புகள் இருந்தன. ஆனால், ஐ.டி துறை மட்டும் தாக்குப்பிடித்து நின்றது. சென்ற ஆண்டு ஐ.டி துறையில் பல்வேறு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. திறமையான ஊழியர்களை கிடைப்பது சிரமமமாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் வெளியாகின.

புத்தாண்டு, ஐ.டி துறைக்கு பல கெட்ட செய்திகளை கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது. சென்ற ஆண்டு முழுவதும் உச்சத்தில் இருந்த ஐ.டி துறைக்கு புத்தாண்டு பிறந்ததும் நெருக்கடிகளும் ஆரம்பித்தன. ஏராளமான பன்னாட்டு ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவித்தன.

ஜனவரி 5 அன்று அமேசான் நிறுவனம் முதலில் ஆரம்பித்து வைத்தது. உலகெங்கும் உள்ள அமேசான் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது. அதே நாளில் சேல்ஸ்போர்ஸ், எட்டாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அடுத்தது கால்மேன் சாக்ஸ், மூவாயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

அடுத்தடுத்து சிறிய நிறுவனங்கள் ஆயிரத்திற்கு அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அமேசான் போல கூகிள் நிறுவனமும் 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சியை தந்திருக்கிறது. நடப்பாண்டு முழுவதும் இது தொடர வாய்ப்பிருக்கிறதாக தெரிகிறது.

பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களும் ஊழியர்களை நீக்குவதில் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஸ்விக்கி நிறுவனம் ஆறாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. வேறு எந்த நிறுவனமும் செய்யாத ரிஸ்க்கான விஷயத்தை விப்ரோ நிறுவனம் செய்திருக்கிறது. புதிதாக பணிக்கு சேர்ந்த இளம் ஊழியர்கள் 452 பேரை செயல்திறன் சரியில்லை என்று பணிநீக்கம் செய்திருக்கிறது.

அடுத்தடுத்து நிறுவனங்களின் அறிவிப்பு, ஐ.டி ஊழியர்களையும் அவர்களை சார்ந்திருப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் கூகிள் நிறுவனத்தின் தடாலடி அறிவிப்பு, அதன் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. நியூயார்க் பங்கு சந்தையில் நேற்று கூகிள் நிறுவனத்தில் பங்குகள் 4.3 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளன. அது வேறு விதமான உலகம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com