சமையல்காரர் திடீர் மரணம்:ஒபாமா தம்பதியர் உருக்கம்!

டஃபாரி காம்பெல்
டஃபாரி காம்பெல்

மெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சமையல்காரர் டஃபாரி காம்பெல் என்பவர் நீர்ச்சறுக்கின்போது உயிரிழந்தார்.

ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் அரசுப் பணியாளராக சமையல்காரர் டஃபாரி பணியாற்றினார். அவரை ஒபாமாவின் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால் அவர் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், தங்களுடன் வந்துவிடுமாறு ஒபாமா குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். அதை டஃபாரியும் ஏற்றுக்கொண்டார்.

மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள மார்த்தா வின்யார்டு பகுதியில், ஒபாமா குடும்பத்தினரின் வீட்டில் அவர் பணியாற்றி வந்தார்.வார விடுமுறையை முன்னிட்டு நேற்று அந்தப் பகுதியில் உள்ள எட்கர்டவுன் பெரிய குளத்துக்குச் சென்றார், டஃபாரி. வழக்கம்போல அவர் அங்கு நீர்ச்சறுக்கு விளையாடினார்.நீர்ச்சறுக்கில் இருந்த அவரை திடீரென காணவில்லை. அந்தப் பகுதியில் நீர்ச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த இன்னொரு நபர், உடன் வந்தவரைக் காணவில்லையே என மீட்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி, அங்கு சென்ற மீட்புப் படையினர் ஞாயிறு இரவு 8 மணிக்கு தேடுதல் முயற்சி தொடங்கியது. இரவுவரை தொடர்ந்த தேடுதல் முயற்சி, அடுத்த நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. அதையடுத்து திங்களன்று காலையில் படகு ஒன்றின் சோனார் கருவி மூலம், சடலம் ஒன்றைக் கண்டறிந்தது. கடற்கரையில் இருந்து 30 மீட்டர் தொலைவில் 8 அடி ஆழத்தில், டஃபாரிதான் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் நீர்ச்சறுக்கின்போது பாதுகாப்பு உடை அணிந்திருக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தின் போது ஒபாமாவின் குடும்பத்தினர் ஊரில் இல்லை. தகவல் அறிந்த ஒபாமாவும் அவரின் மனைவி மிச்சேலும் டஃபாரியின் மறைவுக்கு, ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தவரான 45 வயது டஃபாரிக்கு மனைவியும் இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். அவரின் குடும்பத்தினருடன் துயரத்தில் பங்குகொள்ளுமாறு ஒபாமா தம்பதியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   ”முதல் முதலாக நாங்கள் டஃபாரியைச் சந்தித்தபோது, அவர் மிகவும் திறமைசாலியாக பளிச்செனத் தெரிந்தார். உணவு வகைகள் மீது ஆர்வமும் நேசித்து தொழில்செய்யக்கூடியவராகவும் படைப்புத் திறன் கொண்டவராகவும் இருந்தார். அவரின் இந்தப் பண்புகள் எல்லாரையும் கட்டி இழுக்கக்கூடியவையாக இருந்தன.

Editor 1

பல ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் அவர் இனிமையானவராகவும் வினோதமானவராகவும் மிகவும் அன்புமிக்கவராகவும் எங்கள் எல்லாரின் வாழ்விலும் கூடுதல் ஒளியைக் கொண்டுவந்தவராகவும் வாழ்ந்தார். இதனால்தான் நாங்கள் வெள்ளை மாளிகையை விட்டு வந்தபோது, எங்களுடன் வருமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டார். அப்போதிருந்து எங்களுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக டஃபாரி இருந்தார். அவர் இல்லை என்பதைக் கேட்டதும் எங்களின் இதயம் நொறுங்கிவிட்டது.” என்று ஒபாமா குடும்பத்தினர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com