முன்னாள் அதிபர் டிரம்ப் நிறுவனத்துக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம்!

முன்னாள் அதிபர் டிரம்ப் நிறுவனத்துக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம்!

வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வரரான டிரம்புக்கு இது ஒன்றும் பெரிய தொகை இல்லை என்றாலும் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதாக கூறிவரும் நிலையில் இது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

டிரம்ப் கார்ப்பொரேஷன் மற்றும் டிரம்ப் பே ரோல் கார்ப்பொரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் போலியான ஆவணங்கள் மூலம் நீண்டகாலமாக வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரு நிறுவனங்களையும் டிரம்பின் மகன்களான டொனால்டு ஜூனியர் மற்றும் எரிக் இருவரும் நடத்தி வருகின்றனர். 2005 முதல் 2021 ஆம் ஆண்டுவரை உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் தவிர தனியாக அளித்து வந்த பணத்தை கணக்கில் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக டிரம்ப் நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டு வந்த ஆலன் விசில்பர்க் என்பவர் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக கொண்டதால் அவருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனையும், 2 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

அவருக்கு வாடகை இல்லாத சொகுசு வீடு மற்றும் சொகுசு கார்களை வழங்கியதுடன், பேரக்குழந்தைகள் சொகுசான தனியார் பள்ளியில் படிப்பதற்கான கட்டணத்தை டிரம்ப் செலுத்தியதாகவும் இவை கணக்கில் கொண்டுவரப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது விசாரணை ஏதும் நடைபெறவில்லை. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆலன் விசில்பர்க்தான் காரணம் என்று டிரம்ப் கூறிவிட்டார். மேலும் தாம் மீண்டும் போட்டியிட இருப்பதால் அதைத் தடுக்கும் நோக்கில் சிலர் சூழ்ச்சி செய்வதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் டிரம்ப் மீதான சட்டச்சிக்கல்கள் முடிந்துவிடப்போவதில்லை. ஏனெனில் தொடர்ந்து பலமுறை அவர் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்.

2017-2021-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிபர் டிரம்ப், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் மற்றும் நீதிக்கு தடையாக இருந்ததாகவும் அவர் மீது இரண்டு முறை கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி தமது ஆதரவாளர்களைக் கொண்டு நாடாளுமன்ற எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் வழக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற புலன் விசாரணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் முக்கிய ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இது தவிர கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்பை அதிகரித்து காட்டியதாகவும், அதே நேரத்தில் வரி ஏய்ப்பு செய்ய சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாகவும் டிரம் மற்றும் அவரது குழந்தைகள் மூவருக்கு எதிராக சிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com