சென்னை மற்றும் பெங்களூரில் உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்யும் பாக்ஸ்கான்!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரிக்கும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மாபெரும் உற்பத்தி கட்டமைப்பை வைத்திருக்கும் வேளையில், அதை விரிவாக்கம் செய்வது மூலம் அதிகப்படியான உற்பத்தியை சென்னையில் இருந்து உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல பாக்ஸ்கான் திட்டமிட்டு உள்ளது.
பாக்ஸ்கான் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அதன் உற்பத்தி தளத்தில் புதிதாக இரண்டு கட்டிடங்களைச கட்டி அதன் உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என ஈடி தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் Foxconn Hon Hai Technology India நிறுவனத்தின் உற்பத்தி தளம் உள்ளது. இதே பகுதியில் ஐபோன்கள் தயாரிப்பதற்கு புதிதாக இரண்டு கட்டிடங்கள் கட்ட பாக்ஸ்கான் நிர்வாகம் விரும்புவதாகவும், இதற்கான ஒப்புதல் மற்றும் அனுமதியைப் பெறும்போது அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் பாக்ஸ்கான் பெங்களூரில் ஒயிட்ஃபீல்டு-ல் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (Research & Development Centre) நிறுவவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளதை பார்க்க முடிகிறது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பாக்ஸ்கான் இத்தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் அடுத்த 5 வருடத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலை சார்ந்து குறைந்தது 50000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியாவில் முதல் அதிகாரப் பூர்வ கடையைத் மும்பை மற்றும் டெல்லியில் திறக்க நேரில் வந்துள்ளார். பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரையும் இன்று சந்திக்க உள்ளார்.