ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் - டொனால்ட் ட்ரம்ப்

 ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் - டொனால்ட் ட்ரம்ப்

2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். டொனால்ட் ட்ரம்ப தோல்வியடைந்தார்.

ட்ரம்ப தோல்வியடைந்ததையடுத்து அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் பிறகு கலவரமாக மாறியது. இதையடுத்து, ட்ரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலம் வெறுப்பை விதைப்பதாக கூறி, அவரின் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. இந்தத் தடையை அடுத்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் என்று தனக்காக ஒரு பிரத்யேக சமூக வலைதளத்தையே தொடங்கினார். மேலும், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகி வருகிறார்.

அமெரிக்காவின், கொலம்பியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உக்ரைன் - ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டுவந்திருப்பேன். பேச்சுவார்த்தை மூலம் போர் நடக்காமல் தடுத்திருப்பேன்.

 தற்போதும் பேச்சுவார்த்தையின் மூலம் போரை நிறுத்த முடியும். ஆனால், இங்கு அதனை செய்ய யாரும் இல்லை. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பலவீனத்தாலும், திறனற்ற ஆட்சியாலும் நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நான் அதிபரானால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் செய்து காட்டுவேன்" என்றார்.

கடந்த வாரம், டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில், " ரஷ்யா - உக்கரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்... அதனை விட்டுவிட்டு, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதால், போர் அடுத்த கட்டத்திற்கு தான் செல்லும். முதலில் டேங்குகள், பின்னர் அணுஆயுதங்கள் என்று வரிசை கட்டும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்" என்று கோரியிருந்தார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா 3 டஜன் M1 Abrams டாங்குகளை வழங்கும் என்று பைடன் நிர்வாகம் அறிவித்த நிலையில் ட்ரம்ப் இந்தக் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அண்டோலி ஆண்டோனோவோவும் அமெரிக்காவின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். ஸ்கை நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், "அமெரிக்கா, உக்ரைனுக்கு டாங்குகள் வழங்குவது வம்பை வளர்த்துவிடும் செயல், அமெரிக்காவுக்கு எங்களை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com