இம்ரான் கான் கைது.. பிடிஐ கட்சியினர் போராட்டம் .. பாகிஸ்தானில் கடும் பதற்றம்!

இம்ரான் கான் கைது.. பிடிஐ கட்சியினர் போராட்டம் .. பாகிஸ்தானில் கடும் பதற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று நீதி மன்ற வளாகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் இன்று இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்கு அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

இம்ரான் கான், பயங்கரவாதம், தேசத்துரோகம், மத நிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர் கொண்டுள்ள அவர் , காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார்.

'என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்' என்றும் மசாரி கூறி உள்ளார்.

ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, பாகிஸ்தானில் பதற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது

இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரேஞ்சர்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இம்ரான் கானை தாக்கியதாகவும் பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி குறற்ம்சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com