பாகிஸ்தானில் நீதிமன்ற உத்தரவினாலும் இம்ரான்கானைக் கைது செய்யமுடியவில்லை!
பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான்கான் 2018 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். அப்போது வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த விலை உயர்ந்த பரிசுப்பொருள்களை பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷாகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான்கான் ஆஜராகாமல் இருந்து வந்ததை அடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் கடந்த பிப். 28 ஆம் தேதி பிறப்பித்தது.
தன் மீதான கைது வாரண்டை ரத்துச் செய்யக்கோரி இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்த்து. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்காவது முறையாக இம்ரான்கான் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்தார்.
முன்னதாக தனது கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் கில் என்பவரை கைது செய்ய பெண் நீதிபதி ஸெபா செளத்ரியும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பின்விளைவுகளை சந்திப்பார்கள் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பேசியிருந்தார். இதையடுத்து பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் பரிசுப்பொருள்கள் வழக்கு தொடர்பாக வரும் 18 ஆம் தேதியும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் வரும் 21 ஆம் தேதியும் இம்ரான் கானை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டையும் திங்கள்கிழமை பிறப்பித்தது.
இதுகுறித்து லாகூர் உயர்நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், இம்ரான் கைது விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் பஞ்சாப் மாகாண போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உஸ்மான் அன்வர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் இம்ரானை கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இஸ்லாமாபாத் போலீஸார் கொண்டுவந்ததால், சட்டப்படி அவரை கைது செய்யவேண்டியிருப்பதாக நீதிபதியிடம் அவர் கூறினார்.
இம்ரானை கைது செய்ய முயற்சித்தபோது அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் 59 காவலர்கள் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்ரான்கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் அவரை கைது செய்து வரும் 18 ஆம் தேதிதான் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அவரை கைது செய்யத் தேவையில்லை என்று வாதிட்டார். மேலும் இம்மாதம் 18 ஆம் தேதி இம்ரான்கான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்று நீதிமன்றத்தில் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இம்ரானை கைது செய்யும் நடவடிக்கையை வியாழக்கிழமை காலை வரை தாற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.