இந்தியா நல்ல பாடம் கற்றுக்கொடுத்து விட்டது- பாகிஸ்தான் பிரதமர் அலறல்!

இந்தியா நல்ல பாடம் கற்றுக்கொடுத்து விட்டது- பாகிஸ்தான் பிரதமர் அலறல்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அல் அரேபிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுடனான போர்களில் நாங்கள் பெரிய பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இனி, அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, “நமது நாட்டிலும் பொறியாளர்கள், மருத்துவர்கள், திறமை வாய்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த மதிப்பில்லாத சொத்துக்களை நாம் முறையாகப் பயன்படுத்தி வளர வேண்டுமோ தவிர, தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடாது. இதுவே தற்போது எங்களது விருப்பம். மக்கள் அமைதியோடு வாழ்ந்து, நாடு வளம் பெறுவதா அல்லது மற்ற நாடுகளோடு போரிட்டு நமது நாட்டின் வளத்தையும் வளர்ச்சியையும் சீரழிப்பதா என்பதுதான் தற்போது நமது கைகளில் உள்ளது.

அது மட்டுமின்றி, அண்டை நாடான இந்தியாவுடன் கடந்த காலங்களில் மூன்று முறை போர் செய்துள்ளோம். அந்தப் போரின் மூலம் நமது நாட்டு மக்களுக்கு மிஞ்சியது துயரமும் வறுமையும் வேலை வாய்ப்பின்றி அவர்கள் தவித்ததும்தான். அந்தப் போர்களின் மூலம் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். தற்போது அமைதியான முறையில் இந்தியாவுடன் உள்ள பிரச்னையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன். அது மட்டுமின்றி, எங்கள் நாட்டு வளங்களையும் வெடிகுண்டுகளையும் மற்றும் வெடி மருந்துகளையும் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. மேலும், இந்த இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள்தான். தவிர, இரண்டு நாட்டு ராணுவங்களிடமும் பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் உள்ளன.

அதனால் இந்த இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால் இரு நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது. ஆகவே, இந்தியாவுடன் அமைதியான நல்லுறவையே நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான் இரு நாடுகளுமே நல்ல வளர்ச்சியைக் காண முடியும். இதற்கு முதல்கட்டமாக காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா முன்வர வேண்டும். அங்கு நடக்கும் அசம்பாவிதங்களை நாங்கள் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற மனித உரிமை மீறல்களை இந்தியா இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com