ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்கிறது.

ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா  தலைமை  ஏற்கிறது.

டி-20 கிரிக்கெட் போட்டிகளைப்பற்றி உலகில் பலர் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிக முக்கியமான இன்னொரு 20 யைப் பற்றி வெளியாகியிருக்கும் செய்திகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

நம் நாடு 75ம் ஆண்டு சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் G.20 நாடுகளின் மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறப்போகிறது. அதன் தலைவராக நம் பிரதமர் மாநாட்டை வழி நடத்துவார் என்பதுதான் அந்தச் செய்தி.

அதென்ன G-20

20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பு இது. இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்கள்.

இந்தக் கூட்டமைப்பில் இப்போது அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இதில் உறுப்பினர் நாடுகள்.

இந்த ஜி-20 நாடுகளின் மொத்த பொருளாதாரம் உலக உற்பத்தியில் 85% மும், உலக வணிகத்தில் 80% மும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.

ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த வலிமை மிகுந்த அமைப்பின் மாநாடு வரும் 2023 ல் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த அமைப்பிற்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு உறுப்பு நாடும் தலைமை பொறுப்பை ஏற்கும். அந்த வகையில், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.

Group of Twenty
Group of Twenty

அதற்கு முன்னதாக, வரும் 15, 16ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அண்மையில் ஜி-20 மாநாட்டின் இந்திய சின்னம், இணையதளம், கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அறிவிக்கப்பட்டிருக்கும் அமைப்பின் சின்னத்தில், ஜி-20 என்பதில் உலக உருண்டையும், 7 இதழ்களை கொண்ட தாமரையும் இடம் பெற்றுள்ளது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் (வாசுதேவ குடும்பம்) என்பதே உலகிற்கு இந்தியா தரும் செய்தி. உலகை ஒன்றிணைப்பதில் இந்தியாவின் நம்பிக்கையையும், பாரம்பரிய கலாசாரத்தையும் தாமரை பிரதிபலிக்கிறது என்று சின்னத்தை அறிமுகப்படுத்தும்போது பிரதமர் இந்த மிகப்பெரிய நிகழ்விற்கு இந்தியா தலைமை ஏற்பதற்காக, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார். இந்த மாநாட்டின் நிர்வாக அதிகாரியாக ஒன்றிய அரசின் அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், “சின்னத்தின் வண்ணமும் அதிலுள்ள தாமரையும் பா.ஜ.க.வின் சின்னமும் வண்ணமும் என்றும், பல உலக நாடுகள் பங்கேற்கும் மாநட்டின் சின்னத்தில் கூட தங்கள் கட்சி அடையாளங்களை விளம்பரப்படுத்துகிறார்கள்” என்றும் எதிர்கட்சிகள் குரல் எழுப்புகின்றன.

“இது குறுகிய பார்வை. தாமரை மிகவும் சிறப்பான மலர். லஷ்மி, சரஸ்வதி போன்ற தெய்வங்கள் அமர்ந்திருப்பதாக நம் புராணங்கள் பேசுகின்றன. மேலும் அந்த தாமரை சின்னத்தில் இருக்கும் 7 இதழ்கள் உலக வரைப்படத்திலிருக்கும் 7 கண்டங்களை குறிக்கிறது.”

(தாமரை மலரில் 8 இதழ்கள் இருக்கும்) என்கின்றனர் பா.ஜ.க. தரப்பினர்.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை(Lotus)..தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர். ஏனெனில் தாமரை சேறு நிறைந்த, அழுக்கான நீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்குபடியாமல் தூய்மையாக இருக்கும் ஒரு மலர்.

இந்திய சமய தத்துவங்களில் தாமரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. தாமரை மலர் கடவுள் லட்சுமியின் ஆசனமாக கருதப்படுகிறது. செல்வ வளத்தைக் குறிக்க இரு கைகளில் தாமரை ஏந்தி இருப்பது, வெள்ளைத் தாமரையில் சரஸ்வதி வீற்றிருப்பதாக கூறப்படுவதிலிருந்து இந்திய கலாசாரம் தாமரை மலருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரியம். பழங்கால கட்டிடக் கலைகளிலும்,சிற்பங்களிலும் தாமரை மலர் இடம் பெற்றுள்ளன. அது தவிர, அரசர்களின் ஆட்சிக் காலத்தில் தாமரைச் சின்னம் பொறித்த நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன.

இன்று உலகமே மந்த பொருளாதார நிலையில் தவிக்கிறது.

உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை நோக்கமாகக்கொண்ட ஒரு அமைப்பின் முக்கிய மாநாடு நம் நாட்டில் இந்த நேரத்தில் நடக்க இருப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com