மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா - இனி 40 வருஷம் நம்மை யாரும் நெருங்க முடியாது!

மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா - இனி 40 வருஷம் நம்மை யாரும் நெருங்க முடியாது!

2023 புத்தாண்டு, இந்தியாவுக்கும் சீனாவுக்கு முக்கியமான ஆண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின் படி இவ்வாண்டு முடிவில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா தொட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதாவது 141 கோடியை தாண்டிவிடும் என்றார்கள். ஆனால், இப்போதே தாண்டிவிட்டதாக செய்திகள் வருகின்றன.

சீனாவின் மக்கள் தொகையும் எப்போதுமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது எண்ணிக்கையில் 8 லட்சத்து 50 ஆயிரம் குறைந்திருக்கிறது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் தொகையை உயர்த்துவதற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும், பெரிய அளவில் பலனில்லை.

2021ல் 7.52 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு விகிதமும் 2022ல் ஆண்டில் வீழ்ச்சி கண்டிருப்பதாக திடுக்கிடும் தகவலை சீனாவின் தேசிய புள்ளியியல் கழகம் தெரிவிக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி கிடுகிடுவென்று சரிந்திருக்கிறது.

இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சீனாவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. கடந்த ஆண்டில் சீன அதிபர் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன் படி ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் சீன தம்பதியினருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் பிறந்தால் சீனாவில் உள்ளூர் நிர்வாகம் பரிசுப்பொருளும் பணமும் தருகின்றன. மூன்று குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பத்திற்கு 5500 டாலர் மதிப்புள்ள ஊக்கத் தொகையும் தரப்படுகிறது.

சீனா மட்டுமல்ல ஜப்பான், தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் குறைவான மக்கள் தொகை விகிதம், சீனியர் சிட்டிஸன் அதிகரிப்பு போன்றவை இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான ஏற்றம் என்பது காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் மட்டுமே நடந்திருக்கிறது.

இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் எதிர்பார்ப்பை தாண்டி மக்கள் தொகை எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவை விட 50 லட்சம் அதிகம் என்கிறார்கள். இனிதான் உறுதி செய்தாக வேண்டும்.

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2050 வரை ஏற்றத்தில் இருக்கும் என உலக மக்கள் தொகை கணக்கீடு அமைப்பு தெரிவிக்கிறது. இனி மக்கள் தொகை விஷயத்தில் இந்தியாவை முந்த வேண்டுமென்றால் 2064 வரை சீனா காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். அடேங்கப்பா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com