அமெரிக்காவில் மின்னல் தாக்கி இந்திய மாணவி மூளை செயலிழப்பு!

உதவி கோரும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்
அமெரிக்காவில் மின்னல் தாக்கி இந்திய மாணவி மூளை செயலிழப்பு!

மெரிக்காவில் படித்துவந்த இந்திய மாணவி படிப்பு முடிவடைய உள்ள நேரத்தில், மின்னல் தாக்கியதால் மூளைச் செயல் இழப்புக்கு ஆளாகி உள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுஸ்ரூன்யா கொடுரு எனும் 25 வயது மாணவி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். பல்கலைக்கழகப் பரிமாற்றத் திட்டத்தில் முதுநிலை தகவல் தொழில்நுட்பம் படிப்பை முடித்து கடைசியாக உள்ளகப் பயிற்சிக்குச் செல்ல அவர் தயாராக இருந்தார். அத்துடன் அவருடைய முதுநிலைப் படிப்பும் நிறைவடைந்துவிடும் நிலையில் இருந்தது.

படிப்பு முடிவடைய இருந்த சமயத்தில், கடந்த 2ஆம் தேதியன்று மாணவி கொடுரு, சான் ஜெசிந்தா நினைவுச்சின்னத்தைப் பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள குளக் கரை ஓரமாக நடந்து சென்றுகொண்டு இருந்த அவரை, மின்னல் தாக்கியது. அதில் தூக்கிவீசப்பட்ட கொடுரு, குளத்துக்குள் பதினைந்து அடி தொலைவுக்கு மேல் போய் விழுந்தார். அங்கிருந்த இருவர் உடனடியாகக் குளத்தில் பாய்ந்து, அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சுஸ்ரூன்யா கொடுரு
சுஸ்ரூன்யா கொடுரு

மின்னல் தாக்கியதில் மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளிக்கப்பட்டதால் இருபது நிமிடங்களில் அவருடைய இதயம் சீரடைந்தது. ஆனால் அவருடைய மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.
நேற்றுவரை அவருக்கு செயற்கைச் சுவாசம் மட்டுமே அளிக்கப்படுகிறது. குறிப்பாக டிரக்யோஸ்டமி உதவியால் அவருக்கு சுவாச உதவியும், உணவுக்குழாய் மூலமான ஊட்டச்சத்தும் அளிக்கப்படுகிறது.மாணவியின் மூளை இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை இது தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாரிஸ் கவுண்டியின் செரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நகரில் இதுவரை ஆறு பேர் மின்னல் தாக்கியதில் இறந்துள்ளனர் என்றும் ஆண்டுக்கு சராசரியாக 43 மின்னல் தாக்குதல்கள் நிகழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
மின்னல் தாக்குவதால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழந்து விடுவதாகவும், மீதமுள்ளவர்கள் வேறு பல பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியை இந்தியாவுக்குக் கொண்டுவர அவரின் குடும்பத்தினர் நிதிதிரட்டல் பக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.இந்தியாவில் இருந்து அவருடைய பெற்றோரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com