வெளிநாட்டில் போய் படிக்க விருப்பமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

வெளிநாட்டில் போய் படிக்க விருப்பமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

உலகளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களெல்லாம் இனி இந்தியாவை தேடி வரப்போகின்றன. இந்திய நகரங்களில் அதன் கிளைகள் அமையவிருக்கிறது. தொலைதூரக் கல்வி அல்ல, நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

முதல் கட்டமாக, ஆக்ஸ்போர்டு, ஸ்டாண்போர்டு, யேல் பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அது சட்டமாக்கப்பட்ட பிறகு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க அனுமதிக்கும் வரைவு விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அனுமதி கோரினால் முதல் பத்து ஆண்டுகளுக்கு செயல்பட அனுமதி தரப்படும். பின்னர் நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

முழு நேர வகுப்புகளை நடத்துவதாக இருந்தால் மட்டுமே அனுமதி தரப்படும். இணைய வழி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. சேர்க்கைக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழங்களே முடிவு செய்து கொள்ளலாம். கல்வித்தரம் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இணையாக இருப்பதை யுஜிசி உறுதி செய்யும்.

நிதியுதவி, மத்திய அரசின் அந்நிய செலாவணி பரிமாற்றச் சட்டத்துக்கு உட்பட்டது. உலகளாவிய தர வரிசையில் இடம் பெற்றுள்ள கல்விகள் விண்ணப்பிக்கலாம். யுஜிசி நிலைக்குழு, விண்ணப்பங்களை பரிசீலிக்கும். 45 நாட்களுக்குள் அனுமதி தரப்படும். அனுமதி கிடைத்த நாளில் தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் வளாகங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய மாணவர்கள் இனி வெளிநாட்டில் போய்த்தான் படிக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் உலகத்தரமான பல்கலைக்கழகங்களோடு இந்தியப் பல்கலைக்கழகங்கள் போட்டியிட வேண்டியிருக்கும். தரமான கல்வி கிடைக்கும்.

உள்ளூர் பல்கலைக்கழகங்களால் போட்டியை சமாளிக்க முடியுமா? ஏற்கனவே பல சிக்கலில் இருக்கும் தனியால் பல்கலைக்கழகங்களின் எதிர்ப்பை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நியாயமான கேள்விதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com