சர்வதேச ’காணாமல் போன’ குழந்தைகள் தினம்!

சர்வதேச ’காணாமல் போன’ குழந்தைகள் தினம்!

கோடி கோடியாய் எத்தனை சொத்துகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு அத்தனையும் ஈடாகாது. வானளாவ புகழ் பெற்றாலும் வா வென்று ஆசையுடன் அழைத்து குழந்தை தரும் முத்தமே இனிக்கும்.  எத்தனை பிரச்சினைகள் கவலைகள் இருந்தாலும் ஒரு மழலையின் புன்னகை அத்தனையையும் தூரத் தள்ளி நமக்குள் மகிழ்ச்சி  தரும். இந்த நாகரீக உலகில் இன்னும் குடும்பங்கள் உடையாமல் இருக்க அடிப்படைக் காரணியாக இருப்பவர்கள் குழந்தைகளே. குழந்தைகள் பிறக்கும்போது கள்ளம் கபடமற்ற தூய்மையான உள்ளத்துடன் அன்றலர்ந்த மலராக இருப்பதனால்தான் குழந்தையை தெய்வத்துடன் ஒப்பிட்டு பேசுவார்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் மகிழ்ச்சியைத் தரும் குழந்தைகளே நம் எதிர்காலமும் ஆகிறார்கள்.

    அந்தக் குழந்தைகள் எதிர்பாராத விதமாக காணாமல் போய்விட்டால் பெற்றோர் படும் வேதனை சொல்லில் அடங்காது. இப்படித்தான் 1979 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் எனும் ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட புகைப்பட கலைஞராக இருந்த அக்குழந்தையின் தந்தை தன் குழந்தையின் புகைப்படத்தை எல்லா இடங்களிலும் வெளியிட்டு தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது தீவிரமான தேடல் அன்றைய ஊடகங்களின் கண்களில் பட அதை தலைப்புச் செய்தியாக்கி குழந்தை காணாமல் போன செய்தியை நகரமெங்கும் அறிவித்தது. இந்த செய்தியின் தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளில் 1979 ஆம் ஆண்டு முதல்  1981 ஆம் ஆண்டு வரை குளம் ஆறு போன்ற பல்வேறு இடங்களில் காணாமல் போன 29 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கத்தினால் 1983 ல் அப்போதைய அமெரிக்க அதிபரான ரொனால்ட் ரீகன் அந்தக் குழந்தை காணாமல் போன தேதியான மே 25 ஆம் தேதியை “சர்வதேச காணாமல் போன குழந்தைகளுக்கான தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து அமெரிக்காவில் “காணாமல் போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது .

பல்வேறு காரணங்களால் காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையான குழந்தைகளுக்கு குடும்பம் மற்றும் அரசின் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். உலக அளவில் ஆண்டுக்கு சராசரியாக இருபாலரும் அடங்கிய ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இதில் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகம் என்பதும் குறிப்படத்தக்கது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 45ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக குழந்தைகள் காணாமல் போகும் மாநிலமாக மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.

வறுமை, பெற்றோரின் கண்டிப்பு அலட்சியம் இவைகளால் வீட்டை விட்டுக் காணாமல் போகும் அறியாத வயதில் உள்ள சிறுவர் சிறுமியர் பெரும்பாலும் புகாரின் பேரில் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பிச்சை எடுக்க வைக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளுக்காகவும். கயவர்களால கடத்தப்பட்டு காணாமல் போகும் குழந்தைகளின் நிலைதான் வேதனைக்குரியது.

ஒரு குழந்தை காணாமல்போன விஷயம் நமக்குத் தெரிந்தால் உடனே புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் அறக்கட்டளையை 1098 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தெரிவித்தால் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், தொலைந்து பின் மீட்கப்படும் குழந்தைகளை தகுந்த விபரங்களை சேகரித்து பெற்றோரிடம் சேர்க்கவும் உதவி கிடைக்கும். தனியாக நிற்கும் குழந்தைகளைப் பார்த்தால் அவர்கள் அருகில் சென்று என்ன யார் என்ற விபரங்களுடன் அவர்களுக்கு உதவுவதே நாம் இந்த சமூகத்துக்கும் அந்தக் குழந்தைகளின்பெற்றோருக்கும் செய்யும் மாபெரும் கடமை அல்லது உதவியாக இருக்கும்.

ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது மட்டும் பெற்றோரின் கடமை ஆகிவிடாது. ஒரு வயது வரை அவர்களுக்கு பாதுகாப்புத் தரவேண்டியதே ஒவ்வொரு பெற்றோரின் முக்கியக் கடமையாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com