சர்வதேச பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அறிவியல் தினம் - இந்தியப் பள்ளி மாணவிகளின் சாதனை!

சர்வதேச பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அறிவியல் தினம் - இந்தியப் பள்ளி மாணவிகளின் சாதனை!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது நவீன அறிவியல். உலகில் பெரும்பாலான நாடுகளில் கல்வி அறிவு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் தினம் தினம் புதுக்கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி வரும் அறிவியலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எனினும் இந்த அறிவியல் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் முழுமையாக இருக்கிறதா எனும் கேள்வியும் எழுகிறது. பாலின சமத்துவம் என்பது இன்னும் இது போன்ற துறைகளில் கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவேதான் உலக நாடுகள் பெண்கள் மற்றும் மாணவிகளை அறிவியலில் ஆர்வத்துடன் ஈடுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அவர்களின் கவனம் அறிவியலில் முழுமையாக செல்ல ஏதோவொரு தடை இருப்பதாகத் தோன்றுகிறது. இதைத் தவிர்க்கவும் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் முக்கியப்பங்கு வகித்து சாதனை செய்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கவுரவித்து அங்கீகரிக்கவும் ஐக்கிய நாடுகளின் பொதுசபையால் பிப்ரவரி 11 ஆம் தேதி சர்வதேச பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அறிவியல் தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நாடுகளில் ஆண்களுக்கு நிகராக சில சமயங்களில் அவர்களை விடவும் பெண்களுக்கு சம உரிமை, சரியான முறையில் வழங்கப்பட்டு வந்தாலும் உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க  இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்கள் அறிவியலில் பங்குபெறும் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் உயர் கல்வியில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் முன்னேற்றம் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களும் சூழலும் மாறுபடும்போது அறிவியலில் நாட்டம் கொள்ளும் பெண்களின் ஆர்வமும் மாறுபடுகிறது என்பதும் ஒரு காரணம்.

இந்த நிலை மாற்றப்பட பெண்களின் பங்களிப்பு முழுமையாக அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று ஐநா சபையில் ஆலோசிக்கப்பட்டது. இதன் நீட்சியாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது அனைத்து உறுப்பு நாடுகள் அமைப்புகளோடு இணைந்து அறிவியலில் பெண்களுக்கு சமமான சூழலை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தியது மேலும் பாலின சமத்துவம் மற்றும் பெண் அதிகாரம் ஆகியவற்றை அடைய அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களின்  சமமான அணுககலை ஊக்குவிப்பதும் அவசியம் என்று ஆலோசனை அளித்து இந்த நாளை அங்கீகரித்துள்ளது.

இந்த இடத்தில நம் இந்தியப் பள்ளி மாணவிகளை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். நம் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்து 750  மாணவிகள் தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்தி ஆசாதிசாட் எனும் சுதந்திரசெயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் வெற்றியை ஈட்டியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள தளத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது  இதில் தமிழகத்தின் சென்னை மதுரை மாவட்டம் மாணவிகளும் பங்கேற்று இருந்தனர். இதைத் தயாரித்த மாணவிகள் அனைவரும் விண்வெளி ஆய்வு மையத்துக்கு வந்திருந்து தங்களது பங்களிப்பில் உருவான  செயற்கைக்கோள் சீறி பாய்ந்து சென்றதைக் கண்டு  மகிழ்ச்சியின் உச்சியை அடைந்த மாணவிகள் உணர்ச்சி பெருக்கால் துள்ளிக்குதித்து ஆரவாரம் எழுப்பிய காட்சி கண்ட அனைவர் மனதிலும் உற்சாகத்தை தந்தது.

அதில் பங்கு பெற்ற பள்ளி மாணவிகள் கூறும்போது “எங்களது பள்ளி  வரலாற்றில் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் சாதாரண கிராம புரத்தைச் சேர்ந்த நாங்கள் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் பங்கு பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறோம் ஆனால் இன்று ராக்கெட் விண்ணில் ஏவியதை நேரில் பார்க்கும்போது அளவில்லா சந்தோஷம் ஏற்படுகிறது என்று கூறி ஆனந்த கண்ணீர் விட்டனர் தொடர்ந்து நாட்டுக்காக நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை தயாரிப்பதற்கு இஸ்ரோவில் விஞ்ஞானிகளாக பணியாற்றவும் எங்களுக்கு ஆசை இருக்கிறது என்றனர். இந்த மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை மேலும் ஊக்குவிப்பது நமது கடமை. 

இந்த மாணவிகளைப் போல்  நம் வீட்டில் இருக்கும் நம் பெண் பிள்ளைகளையும்  அறிவியலில் ஈடுபட வைத்து அவர்களை அறிவியலிலும் சாதித்த புதுமைப்பெண்களாக மாற்ற கை கொடுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com