Oscar விருதுக்குப் பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா?

Oscar விருதுக்குப் பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா?

ல்லாத் தரப்பினரும் மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கும் ஆஸ்கார் விருதின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

‘தி அகாடமி’ என்கிற அமைப்புதான் வருடா வருடம் ஆஸ்கார் விருதுகளை அறிவித்து வழங்கி வருகிறது. இந்த அமைப்பு ‘தி அகடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ எனும் பெயரில் 1927ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. ஆரம்பித்த சில காலத்திலேயே நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில், திரைத்துறையின் சிறப்பான படைப்புகளையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கலாம் என்று முடிவு செய்தனர் இந்த அமைப்பைத் தொடங்கியவர்கள். 

இதைத்தொடர்ந்து, அதற்கான விருதாக கொடுக்கப்படும் சிலையை வடிவமைக்கத் தொடங்கினார்கள். பிலிம் சுருளுக்கு மேலே கையில் வாளுடன் வீரர் நிற்பது போன்ற வடிவத்தை உறுதிப்படுத்தினார்கள்.  இதை உருவாக்கு வதற்கான வேலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த சிற்பியான ஜார்ஜ் ஸ்டான்லியிடம் கொடுக்கப்பட்டது. 

ஆஸ்கார் விருதில் வீரன் நிற்கும் பிலிம் ரீலில் ஐந்து ஸ்போக்ஸ் இருக்கும். அது நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனத் திரையுலகில் முக்கியப் பங்கு வகிக்கும் 5 பிரிவினரைக் குறிப்பதாக இருக்கும். முதல் ஆஸ்கார் விருது விழா 1929 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ரூசோவெல்ட் ஹோட்டலில் நடந்தது. இந்த பெருமைமிக்க விருதை முதன்முதலாக சிறந்த நடிகர் பிரிவில், 'தி லாஸ்ட் கமாண்ட்' திரைப்படத்தில் நடித்த எமில் ஜெனிங்ஸ் வென்றார். 

ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த விருது ‘’ ’ஆஸ்கார் அவார்ட் ஆப் மெரிட்’ என்கிற பெயரில்தான் கொடுக்கப்பட்டது. ‘ஆஸ்கார்’ என்பது இந்த விருதின் துணைப்பெயர் மட்டுமே. ஆஸ்கார் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறையக் கதைகள் சொல்லப்படுகின்றன. இதில் மிகவும் பிரபலமான கதை என்னவென்றால், அகாடமி அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருந்த மார்கிரெட் எரிக் இந்த விருதை பார்ப்பதற்கு தன்னுடைய மாமா போலவே இருக்கிறது என்ன சொல்லியுள்ளார். அவர் மாமாவின் பெயர்தான் ஆஸ்கர்.

காலப்போக்கில், 1939 ஆம் ஆண்டு அகாடமி விருதை ஆஸ்கார் விருது என்று கூட கூறலாம் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருது ஒவ்வொன்றும் 13.5 இன்ச் உயரம் கொண்டது. சுமார் 3.8 கிலோ எடை கொண்டது. வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும் இந்தச் சிலையின் மேல் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். 

இந்தச் சிலைகளை நியூயார்க் நகரில் இருக்கும் UAP Polich Tallix நிறுவனம் செய்கிறது. 50 சிலைகளை உருவாக்க கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் தேவைப்படும். விருது வாங்குபவர்களுக்கு இந்தச் சிலை மட்டுமில்லாமல், கூடுதலாக 60 சிறப்புப் பரிசுகள் அடங்கிய ஒரு பரிசுப் பெட்டியும் வழங்குகிறது அகாடமி அமைப்பு. இதன் ஒட்டுமொத்த மதிப்பு இந்திய ரூபாயில் ஒரு கோடிக்கும் மேல் தாண்டுமாம்.  

இந்தப் பரிசு பெட்டியில் 16 டாலர் மதிப்பிலான சிப்ஸ் பாக்கெட்டில் இருந்து, 40 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான சுற்றுலா கூப்பனும் அடங்கும். இத்தாலியில் கலங்கரை விளக்கத்தில் தங்குவதற்கான கூப்பன், முகத்தை அழகு படுத்தும் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான கூப்பன் என அந்தப் பரிசுப் பெட்டியில் உள்ள பரிசுகளின் லிஸ்ட் வெகு நீளம். 

தங்களுடைய படைப்புகளுக்கு உலக அரங்கில் உச்சபட்ச அங்கீகாரம் கிடைக்கும் என்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும், கூடவே அதிகப்படியான பரிசுகளும் கிடைப்பதால் திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் ஆஸ்கார் வெல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. 

அந்த வகையில் தனது ஆஸ்கார் கனவை 2023ல் எட்டிப் பிடித்துள்ளார்கள் இந்தியாவின் கீரவாணி, சந்திரபோஸ், குனீத் மோங்கா மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் அவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com