"கத்திக் குத்துக்குப் பிறகு மனவடுக்கள் காரணமாக எழுதுவது கடினமாக உள்ளது" சல்மான் ருஷ்டி!

"கத்திக் குத்துக்குப் பிறகு மனவடுக்கள் காரணமாக எழுதுவது கடினமாக உள்ளது" சல்மான் ருஷ்டி!

 “கத்திக்குத்து சம்பவம், அதைத் தொடர்ந்து கண்பார்வை பாதிக்கப்பட்டதை அடுத்து மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களால் புத்தகங்கள் எழுதுவது கடினமாக உள்ளது” என்கிறார் 75 வயதாகும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.

மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி, பிரிட்டனில் உயர்கல்வி படித்துவிட்டு அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர். அமெரிக்கக் குடியுரிமையும் உள்ளது. தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

இதுவரை 14 புத்தகங்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டி, புக்கர் பரிசு உள்ளிட்ட உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியது. முஸ்லிமாக பிறந்து நாத்திகராக வாழ்ந்து வரும் அவர், கடந்த 1988-ம் ஆண்டில் “சாத்தானின் கவிதைகள்” என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொலை செய்ய வேண்டும் என்று கடந்த 1989-ம் ஆண்டில் பத்வா வெளியிட்டார்.

இந்த சூழலில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென மேடையில் ஏறி ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்தினார்.

உயிருக்கு போராடிய சல்மான் ருஷ்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் உயிர்பிழைத்தாலும் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஹாதி மடார் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இதனிடையே நியூயார்க் பத்திரிகைக்கு அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கத்திக்குத்து சம்பவத்தால் ஏற்பட்ட மனவடுக்கள் காரணமாக எழுதுவது கடினமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் எழுத உட்கார்ந்தாலும் என்னால் எழுதமுடியவில்லை. கண்கள் மறைக்கின்றன. தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியே ஓரிரு வரிகள் எழுதினாலும் அடுத்தநாள் அவற்றை அழித்துவிடுகிறேன். என்னால் வார்த்தைகளை ‘டைப்’ செய்ய முடியவிலை. கைவிரல்களில் உணர்ச்சி இல்லாததுபோல் உணர்கிறேன். கைகளுக்கு வலுவேற்ற சில பிஸியோதெரபி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எழுதுவது கடினமாக இருக்கிறதே தவிர, நான் மோசமாக பாதிக்கப்படவில்லை. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் மகன்கள் எனக்கு உதவிகரமாக இருக்கிறார்கள் என்கிறார் ருஷ்டி.

கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு உங்களை பாதுகாத்துக் கொள்ள தவறிவிட்டீர்களா? என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை நான் என்னிடமே கேட்டுக்கொண்டேன். ஆனால், விடைதான் தெரியவில்லை.

கொமேனியின் பத்வாக்கு பிறகு நான் 20 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான். நான் வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதே இல்லை. நேற்று என்ன நடந்தது என்பதைவிட நாளை என்ன நடக்கப்போகிறது என்பதுதான் முக்கியம் என்கிறார் ருஷ்டி.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 31) ருஷ்டி எழுதிய “விக்டரி சிட்டி” புதிய நாவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் 14-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதையாகும் இது. இந்த புத்தகத்தை கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு முன்னரே எழுதிவிட்டதாக ருஷ்டி கூறுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com