லாஸ் வேகாஸின் முதல் பெண் மெஜிஷியன் குளோரியா டீ 100 வயதில் மறைந்தார்!

லாஸ் வேகாஸின் முதல் பெண் மெஜிஷியன் குளோரியா டீ 100 வயதில் மறைந்தார்!

1940 களின் முற்பகுதியில் லாஸ் வேகாஸின் முதல் பெண் மந்திரவாதி என பிரசித்தி பெற்றிருந்த குளோரியா டீ இறந்துவிட்டார். அவருக்கு வயது 100.

டீ, தனது லாஸ் வேகாஸ் இல்லத்தில் சனிக்கிழமை இறந்தார் என்று டீயின் பராமரிப்பாளர்களில் ஒருவரான வேலி ஹாஸ்பிஸின் மருத்துவ சேவைகளின் இயக்குனர் லானே ஜென்கின்ஸ் கூறினார்.

அவருக்கு நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1952 இல் பஸ்டர் க்ராப் நடித்த "கிங் ஆஃப் தி காங்கோ" உட்பட 1940கள் மற்றும் 50களில் டீ பல திரைப்படங்களில் தோன்றினார்.

குளோரியா டீ, 1980 இல் கலிபோர்னியாவில் இருந்து லாஸ் வேகாஸுக்கு குடிபெயர்ந்தார். புகழ்பெற்ற மந்திரவாதி டேவிட் காப்பர்ஃபீல்ட் பிற்காலத்தில் குளோரியாவுடன் நட்பு கொண்டார் என்று லாஸ் வேகாஸ் ரிவியூ-ஜர்னல் கூறுகிறது.

"இந்த துறையில் குளோரியா ஒரு ஆச்சர்யம். அவள் இதில் வேடிக்கையானதொரு வசீகர ஈடுபாட்டுடன் இருந்தாள்,” என்று காப்பர்ஃபீல்ட் செய்தியாளர்களிடம் கூறினார். "வேகாஸில், ஒரு இளம் மந்திரவாதியாக, அவள் அனைத்தையும் தொடங்கினாள். அவளை அறிந்தது பெருமையான தருணம்” என்று காப்பர்ஃபீல்ட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1941, மே 14 இல் எல் ராஞ்சோ வேகாஸில் மேஜிக் ஷோ நிகழ்த்திக் காட்டிய போது குளோரியா டீ க்கு 19 வயது.

ரவுண்டப் அறையில் அவரது நிகழ்ச்சி லாஸ் வேகாஸில் ஒரு மந்திரவாதியாகப் பதிவுசெய்து கொண்ட பின்னான அவரது முதல் தோற்றம் என்று ரிவியூ-ஜர்னல் ஞாயிறன்று தெரிவித்தது.

கடந்த அக்டோபரில் குளோரியா தனது 100 வயதை நிறைவு செய்தார்.

கலிபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, 1945 இல் "மெக்ஸிகானா" மற்றும் 1957 இல் "பிளான் 9 ஃப்ரம் அவுட்டர் ஸ்பேஸ்" உட்பட பல திரைப்படங்களில் டீ தோன்றினார்.

"நான் குழந்தைகளுக்காக சனிக்கிழமை மாட்னி திரைப்படங்கள் அத்தனையிலும் இருந்தேன்," பிளான் 9 ஃபிரம் அவுட்டர் ஸ்பேஸ்’ எல்லா காலத்திலும் மோசமான படம். … இருந்தாலும் குழந்தைகள் பார்த்து மகிழ்வார்கள் என்று நான் அதை மகிழ்ச்சியுடனே செய்தேன் என்று தனது நேர்காணல் ஒன்றில் குளோரியா நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

ஆனால் அதுவே பொழுதுபோக்குத் துறையைப் பொருத்தவரை குளோரியா டீயின் கடைசி பங்களிப்பாக இருந்தது. அதன் பின்னர் அவர், சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் புதிய மற்றும் பழைய பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் டீலர்ஷிப்பை எடுத்து நடத்தி நிறைய கார்களை விற்று, ஒரு சிறந்த விற்பனை பிரதிநிதியாக ஆனார்.

ரிவியூ-ஜர்னலின் படி, குளோரியா டீ தனது பெற்றோருக்கு ஒற்றைக் குழந்தையாகப் பிறந்தவர். அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் என எவரும் தற்போது இல்லை. அவரது கணவர் சாம் அன்சலோன், முன்னாள் கலிபோர்னியா கார் விற்பனை நிர்வாகி, அவரும் கூட ஜனவரி 2022 இல் இறந்து விட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு UNLV காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேமில் டீ பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த திட்டங்கள் முழுமை அடைந்திருந்தால்; நிகழ்ச்சிக்கு முன்னான ஒரு விளக்கக்காட்சியில் காப்பர்ஃபீல்டால் டீ அறிமுகப்படுத்தப் பட்டிருப்பார்.

இப்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் என்ன? குளோரியா டீ தனது மந்திரவாதத் திறமையைக் காட்ட கடவுளிடம் சென்று விட்டதாகக் கருத வேண்டியது தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com