ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது தவறு: 57% பிரிட்டானியர்கள் கருத்து!

ஐரோப்பிய  ஒன்றியத்திலிருந்து விலகியது தவறு: 57% பிரிட்டானியர்கள் கருத்து!

ரோப்பிய ஒன்றிய நாடுகள் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியது தவறு என 57 சதவீத பிரிட்டனியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.யூ கவ் எனும் கருத்துக்கேட்பு நிறுவனம் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமைப்பில் இருந்து பிரிட்டன் விலகியது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கேட்பில் இவ்வாறு வெளிப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் 2016ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியது. அதற்கு முன்னர் பல ஆண்டுகளாகவே, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருந்தால் சாதகமா அல்லது தனியாக இருப்பதால் பிரிட்டனுக்கு சாதகமா என அந்த நாடு முழுவதும் மிகப் பெரிய விவாதம் நீண்டது. ஒருவழியாக, ஐரோப்ப ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் கடந்த 2016ம் ஆண்டு விலகியது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியதில் இருந்து பொருளாதாரப் பிரச்னைகள், தொழில்துறை வளர்ச்சி ஆகியவை குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனாவுக்குப் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளோடு அல்லாமல், பிரிட்டன் தனியாகவே நாட்டின் பொருளாதார பிரசனைகளை எதிர்கொண்டது. அதன் சாதக, பாதகங்கள் பற்றி இங்கிலாந்து, வேல்ஸ், ஐரிஸ் மக்களைக் கொண்ட ஐக்கிய ராச்சியத்தினர் தொடர்ச்சியாக உரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமான கொள்கை முடிவுகள் பற்றி பொதுவாக மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பொது வாக்கெடுப்பு, பொது கருத்துக்கேட்புகள் நடத்தப்படுவது இயல்பு. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது பற்றி அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பு முடிவுகள் இன்று ஜூலை 18ஆம் தேதி வெளியிடப்பட்டன. பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 57 சதவீதம் பேர், ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது தவறானது என்று தெரிவித்துள்ளனர்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள்- 55 சதவீதம் பேர் பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள்- 31 சதவீதம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேராமல் தனியாகவே இருக்க வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2021 ஜனவரியில் இதேபோல ஒரு கருத்துக்கேட்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், 49 சதவீதம் பேர் இணைவுக்கு ஆதரவாகவும் 37 சதவீதம் பேர் இணைவுக்கு எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பழைமைவாதக் கட்சியின் பிரதமர் ரிஷி சுனக் கடந்த மே மாதம் இதுகுறித்துப் பேசுகையில், பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை, பிரிட்டனுக்கு பலவித பலன்களை அளித்துள்ளது என்று கூறினார். குறிப்பாக, சந்தை வர்த்தக வலையங்கள், வாட் வரி குறைப்பு ஆகியவற்றால், பீர், ஆரோக்கிய சாதனங்கள், தயாரிப்புகள் விலை குறைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.

அதேநேரம் மற்ற முன்னேறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட, பிரெக்சிட்டுக்கு முன்னர் பிரிட்டனின் வர்த்தக முதலீடு நன்கு வளர்ந்த நிலையிலேயே இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டுவரை முதலீட்டு வளர்ச்சி இருந்ததையும் அதன்பிறகு அது மட்டுப்பட்டு விட்டது என்பதையும் பிரெக்சிட் ஆதரவு பொருளியலாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். மேலும், பிரிட்டனின் வர்த்தக தேக்கத்துக்கு பிரெக்சிட் ஒரு காரணமாக இருக்கிறது என்று வர்த்தக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com