உள்ளாட்சித் தேர்தல், 13வது சட்டத்திருத்தம் - பின் வாங்கிய இலங்கை அரசு!

உள்ளாட்சித் தேர்தல், 13வது சட்டத்திருத்தம் - பின் வாங்கிய இலங்கை அரசு!

இலங்கை சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாகாண அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்கிற அறிவிப்பு சில மாதங்களாகவே இருந்தது வந்து.

13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் இலங்கையின் ரனில் விக்ரசிங்கே அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. பிப்ரவரி 4 அன்று சுதந்திரதினத்தின்று இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதுவும் வெளியாகவில்லை.

மார்ச் 9-ந்தேதி இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் அரசு திட்டமிட்டிருந்தது. இரண்டு மாதங்களாக இது சம்பந்தமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழலில் இருப்பதாக சென்ற வாரம் திடீர் அறிவிப்பு வந்தது.

வாக்கு சீட்டுகள் அச்சடிக்கவும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஊதியம், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கான காவல்துறை பாதுகாப்பு போன்றவற்றிற்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டதாக செய்திகள் வந்தன. கருவூலத்தில் போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் என்று அரசிடம் விளக்கம் தரப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க ஆர்டர் தரப்ப்பட்டு விட்டது. அதற்கான பணிகள் முடிவடையும் தருணத்தில் இருந்தன. ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக இலங்கைப் பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதெல்லாம் தெரிந்தும் ஏன் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இலங்கை அரசு ஏராளமான பணம் செலவழித்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் ஏன் சிக்கனம் பார்க்கவேண்டும் என்கிறார்கள். நிதிபற்றாக்குறை மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கடினம் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தேர்தல் நடத்துவது குறித்து, பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்து பேசி, தேவையான நிதி ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ள இருக்கிறது. அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள், அரசு அதிகாரிகள்.

பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதே எங்களுடைய பணி என்கிறது, அதிபர் மாளிகை. இலங்கையில் சுமூக நிலை திரும்பும் வரை காத்திருப்பது நல்லது. இல்லாவிட்டால் நிதிச்சுமையின் காரணமாக அரசுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும் என்கிறார்கள். எது எப்படியோ, இனி ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகே, உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேச்சு திரும்ப ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com