எனது சொத்துக்கள் என் வாரிசுகளுக்குக் கிடையாது. எலான் மஸ்க்!
தன் சொந்த உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் உச்சத்தை அடைந்தவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். சமீபத்தில் தனது சொத்துக்கள் தன் வாரிசுகளுக்குக் கிடையாது என உறுதிபடக் கூறி இருக்கிறார்.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு, சுமார் 170 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சொல்லப்போனால் இவருக்கு பரம்பரை சொத்து என்பதே இல்லை. இருப்பினும் தனது சொந்த உழைப்பால் கோடீஸ்வரராக உயர்ந்தது மட்டுமல்லாமல் குறுகிய காலத்திலேயே உலகையே ஆட்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி சாதித்துக் காட்டியிருக்கிறார்.
குறுகிய காலகட்டத்தில் இவர் அடைந்த உயரத்தை இதுவரை யாரும் பெற்றதில்லை என்றே சொல்லலாம். இங்கே பலருக்கு தன் நண்பர்களுடன் கோவா ட்ரிப் செல்வதே மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது முதல், செயற்கை நுண்ணறிவையும் மனித மூளையும் இணைக்கும் முயற்சிகள் வரை இவரது திட்டங்கள் அனைத்தும் எதிர்காலத்தை நோக்கிய இருக்கும்.
இவர் எந்த அளவுக்கு விடாப்பிடியானவர் என்றால், இவர் பதிவிட்ட சில ட்வீட்டுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதால், சில மாதங்களிலேயே அந்நிறுவத்தை பல லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். இவ்வளவு பெரிய ஆளுமைத் தன்மையும் எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையும் கொண்ட எலான் மஸ்க், தனது சொத்துக்கள் வாரிசுகள் அடிப்படையில் சென்று விடக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். இவருக்கு மொத்தம் மகன்கள், மகள்கள் என 9 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எலான் மஸ்கின் பிள்ளைகள் அவருடன் தொடர்ந்து பழக்கத்தில் இல்லை என்றாலும், அனைவரையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். இவர்களில் காய் மஸ்க், டமியன் மஸ்க் ஆகிய இருவருக்கும் 18 வயது நெருங்கிவிட்டது. எனவே அவரது சொத்துக்களின் சில பகுதியை அவர்களின் பெயருக்கு மாற்றலாம் என நிதி ஆலோசனை பலமுறை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு எலான் மஸ்க் காலம் தாழ்த்தி வந்தார்.
இப்போது தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில், "எனது சொத்துக்களை வாரிசு என்ற அடிப்படையில் மட்டும் பிள்ளைகளுக்கு வழங்கப்போவது கிடையாது. எனது பிள்ளைகளுக்கு என் நிறுவனத்தையும் சொத்துக் களையும் நிர்வகிப்பதற்கு தகுதியும், திறமையும், ஆர்வமும் இல்லாதபோது, நிச்சயம் அவற்றை நான் அவர்களுக்கு வழங்கும் முடிவை எடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய தவறாகும். என்னுடைய பிசினஸில் ஆர்வமோ விருப்பமோ இல்லாத பிள்ளைகளுக்கு பதிலாக, எனது நிறுவனத்திலேயே இருக்கும், அதற்குத் தகுதியான நபர்களிடம் அவற்றை ஒப்படைப்பது சிறந்தது. எனது நிறுவனங்களை நல்ல முறையில் நிர்வகிக்கும் திறமைசாலிகளை நான் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளேன்" என தெரிவித்தார்.
தன் சொத்துக்கள் அனைத்தும் தனது வாரிசுகளுக்கே செல்லும் என பலர் சொல்லும் நிலையில், இவருடைய இந்த கருத்து இவர் மீதான ஆச்சரியத்தை மேலும் கூட்டியுள்ளது.