மர்ம பலூன், ரஷியாவுக்கு உதவிக்கரம் என்று அமெரிக்காவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்தும் சீனா: அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

மர்ம பலூன், ரஷியாவுக்கு உதவிக்கரம் என்று அமெரிக்காவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்தும் சீனா: அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சித்து உள்ளார். தைவான் விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக சீனா நினைப்பதால் பதட்டப்படுகிறது.

சீனா மீதான விரோதக் கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படும். இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் அமெரிக்காவின் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்டக் கூடாது என்றெல்லாம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியிருக்கிறார்.

ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சீனா, தன்னுடைய ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியிருக்கிறது. ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி நிதியை ராணுவ செலவுகளுக்காக ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகம். இன்றைய நிலையில் 20 லட்சம் வீரர்கள் கொண்ட உலகிலேயே பெரிய ராணுவம், சீன ராணுவம்தான். புதிய ஆயுதங்களை வாங்குவதற்காக அதிக நிதி ஒதுக்குவதும் சீனாதான்.

கடந்த ஆண்டு சீனா தனது ராணுவ பட்ஜெட்டை 7.1 சதவீதமாக உயர்த்தியது. அதன்படி ராணுவத்துக்கு 1.45 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இம்முறையும் 0.1 சதவீதத்தை அதிகரித்து, ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ராணுவத்திற்காக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் மர்ம பலூன் பறக்கப்பட்ட விஷயத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து கோபத்தில் உள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவி வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைனை தொடர்ந்து தைவானில் போர் மேகங்கள் சூழம் என்று வரும் செய்திகளால் அமெரிக்கா, சீனா உறவு தொடர்ந்து மோசமாகி வருகிறது. முஷ்டியை உயர்த்தும் சீனாவை, அமெரிக்கா எப்படி சமாளிக்கப் போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com