யு.எஸ். அதிபர் தேர்தலில் குதிக்கிறார் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே!

யு.எஸ். அதிபர் தேர்தலில் குதிக்கிறார் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே!

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதையடுத்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவருக்கும், கட்சியின் சக தலைவரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். குடியரசுக் கட்சியை சார்பில் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இப்போது அதே கட்சியைச் சேர்ந்தவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 76 வயதான டொனால்டு டிரம்புக்கு மாற்று நான்தான் என்கிறார் 51 வயதான நிக்கி ஹாலே.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதானமாக உள்ளன. ஜனநாயக கட்சி சார்பில்

ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டு அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டி என அறிவித்துள்ள நிலையில் இப்போது நிக்கியும் களத்தில் குதித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "நான் நிக்கி ஹாலே. நான் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டின் நிதிப் பொறுப்பை மீட்டெடுக்கவும், நமது எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டின் பெருமை, மற்றும் நோக்கத்தை வலுப்படுத்தவும் புதிய தலைமுறைக்கான தலைமை உருவாக வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பேசியுள்ளார்.

51 வயதாகும் நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அஜித் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். முதலில் கனடாவில் குடியேறிய அஜித் சிங் அதன்பின் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதே தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தனது 39 வயதில் பதவியேற்று அமெரிக்காவின் இளம் ஆளுநர் என்ற சாதனையை கடந்த 2011ல் படைத்தார் நிக்கி ஹாலே. டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

“அமெரிக்கா சமீபகாலமாக அதன் செல்வாக்கை இழந்து வருகிறது. கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுப்பதே எனது லட்சியம். இனவெறி மோதலால் பதற்ம் நிலவும் நாட்டை சீரமைத்து ஒன்றுபடுத்த என்னால் தான் முடியும். நான் கறுப்பர் இனமும் அல்ல, வெள்ளையர் இனமும் அல்ல. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவள். எனது செயல்பாடுகள் வித்தியாசமாகவே இருக்கும்” என்கிறார் நிக்கி ஹாலே.

நிக்கி ஹாலே இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்ட போதிலும், ஃப்ளோரிடா மாநில ஆளுநர் ரான் டிசான்டிஸ் மற்றும் டிரம்ப் ஆட்சியில் துணை அதிபராக இருந்த மைக் பென்ஸும் அதிபர் தேர்தல் களத்தில் குதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தற்போது அதிபராக உள்ளார். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. எனினும் அவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் அவரது செல்வாக்கு சரிவில்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com