மன்னரைப் போல உடை அணிந்த சிறுவனுக்கு ஓராண்டு சிறை!

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கார்ன்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கார்ன்hp

ன்னர் அணியும் உடையை பதினேழு வயது சிறுவனாக இருந்தபோது அணிந்த தாய்லாந்து நாட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

தாய்லாந்து நாட்டில் உலகத்திலேயே மிக மோசமான மன்னராட்சிக் கால சட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. மன்னரையோ அவரின் குடும்பத்தினரையோ விமர்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரச மதிப்புச் சட்டத்தின்படி இப்படி ஒருவரை அதிகபட்சமாக 15 ஆண்டுகள்வரை சிறையில் வைக்க முடியும்.

குறிப்பிட்ட பிரச்னையில் சிக்கிய நபாசிட் என்பவர் 2020ஆம் ஆண்டில் அங்கு நடைபெற்ற ஜனநாயகத்துக்கான அரசியல் இயக்கத்தில் கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் மன்னரைப் போல தோற்றத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்படி நபாசிட்டும் கருப்பு நிற மன்னர் உடையை அணிந்து கொண்டார். அவருடைய உடல் முழுவதும் மன்னரைப் போன்ற தோற்றம் கொண்டதாக வண்ண நிறங்களால் பூசப்பட்டு காணப்பட்டார்.

ஐரோப்பிய ஊடகம் ஒன்றில் இந்தக் காட்சி செய்தியாக வெளிவந்தது. அதைப் பார்த்த தாய்லாந்து மன்னராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கையைத் தொடங்கியது.அதன்படி, இப்போது 19 வயது உடைய அந்த இளைஞர், மன்னரை அவமதித்து விட்டார் எனக் கூறி, அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மன்னர் இந்த நாட்டின் புனிதத் தன்மை கொண்டவர்; இதை மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருப்பதாக, மனித உரிமைகளுக்கான தாய்லாந்து வழக்குரைஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், சம்பவம் நிகழ்ந்தபோது இளைஞருக்கு வயது 16தான் என்பதால், தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது என்றும் அந்த சிறுவன் அளித்த உறுதிமொழி காரணமாக மேலும் ஆறு மாதங்கள் குறைக்கப்பட்டு, ஓராண்டு சிறைவாசம் என மாற்றப்பட்டுள்ளது என்றும் தாய்லாந்து வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனநாயகத்துக்கான போராட்டத்தில், இதுவரை 246 பேர் அரச எதிர்ப்புக்காக, குற்றவாளிகள் என வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர்களில் 20 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தாய்லாந்தில் மூவ் பார்வர்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதன் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட் இந்த அரச ஆதிக்கச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாக உறுதியளித்து இருந்தார்.

ஆனால், கடந்த புதன்கிழமையன்று பிரதமர் பதவிக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னர், பிட்டாவுக்கு அதில் போட்டியிடத் தகுதி இல்லை என நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. தாய்லாந்தில் மன்னராட்சிக்கு ஆதரவான இராணுவமும் அதைச் சார்ந்த கட்சிகளுமே இப்போதைக்கு வலுவாக இருக்கின்றன. அமெரிக்காவில் படித்தவரும் கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்ற புதுமுகமான பிட்டா, அடுத்த பிரதமராக ஆகிவிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனாலும் எதிரணி அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com