பண மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் மகன் உட்பட அனைவரும் விடுவிப்பு!

பண மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் மகன் உட்பட அனைவரும் விடுவிப்பு!
Editor 1

பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் சரீஃபின் மகன் சுலேமானை பணமோசடி வழக்கிலிருந்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

பாகிஸ்தானின் பெடரல் புலனாய்வு அமைப்பின் சார்பில், செபாஸ் சரீஃப், அவரின் மகன்கள் அம்சா, சுலேமான் உட்பட பலர் மீது 2020 நவம்பரில் வழக்குகளைப் பதிந்தது. அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கை அந்நாட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

சுலேமான் நான்கரை ஆண்டுகளாக புலம்பெயர்ந்து இலண்டனில் வசித்துவந்தார். கடந்த டிசம்பரில்தான் பாகிஸ்தான் திரும்பினார். பண மோசடி வழக்கில் மட்டுமில்லாமல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாகவும் அவர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டது.

முன்னதாக, சுலேமான் நாடு திரும்புவதற்கு முன், அவரை பாகிஸ்தானின் பெடரல் புலனாய்வு அமைப்பும் தேசிய பொறுப்புடைமை அமைப்பு -என்.ஏ.பி.யும் கைதுசெய்யக் கூடாது என நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. சுலேமான் பாகிஸ்தானுக்கு வந்த பிறகு கடந்த ஜனவரி மாதத்தில் அவர் மீதான சர்க்கரை ஆலை வழக்கில் ஆதாரம் வலுவாக இல்லை எனக் கூறி, பெடரல் புலனாய்வு அமைப்பு நற்சான்று அளித்தது.

இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தில் சுலேமான் உட்பட்ட பலர் மீதான முக்கிய வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், வழக்கு தொடர்புடைய 27 கேள்விகளுக்கு பெடரல் புலனாய்வு அமைப்பு அண்மையில் தன்னுடைய பதில்களை மனுவாக சமர்ப்பித்து இருந்தது. பண மோசடி வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி பக்த் பக்கார் பெசாத் இதுகுறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

பெடரல் புலனாய்வு அமைப்பின் சார்பில் வாதாடிய வழக்குரைஞரோ, இந்த வழக்கின் புலன்விசாரணையை மறைந்த அதிகாரி ஒருவரே தலைமையேற்று நடத்தினார் என்று குறிப்பிட்டார். அதில் திருப்தி அடையாத நீதிபதி, “ சுற்றி வளைக்காமல் எனக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்; கதை சொல்ல வேண்டாம். எல்லா ஆவணங்களையும் நான் படித்துவிட்டேன். பெடரல் அமைப்பின் எல்லா அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்பிவிடுவேன். என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது? எனக்குத் தேவை இந்த பதில் மட்டுமே!” என்று காட்டமாகக் கேட்டார்.

சுலேமானின் வழக்குரைஞரோ இந்த வழக்கானது அடிப்படை முகாந்திரமே இல்லாத ஒன்று என வாதிட்டார். உடனே குறுக்கிட்ட நீதிபதி, அப்படியென்றால் என்ன கணக்கில் யாருடைய அழுத்தத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது எனக் கேட்டார். பதில் அளித்த அரசு வழக்குரைஞரோ, சுலேமான் குற்றவாளி எனச் சொல்வதற்கான நேரடிச் சான்று எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

அதைக் கேட்ட நீதிபதி, சுலேமான் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார். மேலும், இப்படி ஆதாரம் இல்லாமல் வழக்கைப் பதியும் பெடரல் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் அடுத்து எந்த அதிகாரியும் இப்படி ஆதாரம் இல்லாமல் சட்டவிரோதமாக மேலதிகாரி சொல்வதற்காக வழக்கைப் பதியமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.சுலேமான் உட்பட்ட விடுவிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து, 1,600 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுலேமான் உட்பட்ட விடுவிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து, 1,600 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com