இம்ரான் கான் விடுதலையில் தலையிட்ட பாக் உச்ச நீதிமன்றம்!

இம்ரான் கான் விடுதலையில் தலையிட்ட பாக் உச்ச நீதிமன்றம்!

பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்ற சம்பவம், கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானை பரபரப்பாக்கியிருக்கிறது. அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கை எதிர்கொள்வதற்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான்கானை, ராணுவப்படைகள் அதிரடியாக உள்ளே நுழைத்து கைது செய்தது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கட்சித் தொண்டர்கள் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கலவரத்தில் இறங்கியிருக்கிறார்கள். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் உள்ளிட்ட இடங்களில் அரசு சொத்துகள் சேதப்பட்டிருக்கின்றன.

லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வீடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இம்ரான்கானை கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் டிவியில் தோன்றி மக்களுக்கு விளக்கமளித்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

பெரும்பாலான பாகிஸ்தான் பிரதமர்கள் மீது ராணுவத்தினர் ஊழல் புகார்களை தெரிவிப்பது வழக்கம்தான். ஊழல்கள் மலிந்துவிட்டதாக குறிப்பிட்டு பாகிஸ்தான் ராணுவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலமுறை கலைத்திருக்கிறது. செல்வாக்குடன் உலா வந்த பிரதமர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதே பாணியில் இம்முறையும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இம்முறை பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டின் பிரதமர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட இம்ரான்கான், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பஷீர் ஏற்கனவே நவாஸ் ஷெரீப் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கையும் விசாரித்தவர். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக நவாஸ் ஷெரீப் மீதும் அவரது மகள் மரியம் நவாஸ் மீதும் தீர்ப்பு கூறிய அதே நீதிபதியின் கீழ் இம்ரான்கான் சம்பந்தப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்திருக்கிறது.

இந்நிலையில் இம்ரான்கான் கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அவரது கைதை சட்ட விரோதம் என்று அறிவித்தது. ஒரு மணி நேரத்தில் இம்ரான்கானை நீதிமன்றத்தில் ஆஜார் செய்யுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதையெடுத்து இம்ரான்கான் உச்சநீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். உடனே அவரை விடுதலை செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

இம்ரான்கான் விடுதலையாகிவிட்டாலும், அரசின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். விசாரணை கைதி இல்லையென்றாலும் விருந்தினர் மாளிகையில் அவர் கைதி போல்தான் நடத்தப்படுகிறது. அவரது நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. இன்னும் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளிலும் நீதிமன்றங்களில் விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், வெளியான தீர்ப்புகளில் பெரும்பாலானவை எதிராகவே இருந்திருக்கின்றன. ஆகவே, இம்ரான்கானுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com