விசா இல்லாமல் காதலனை திருமணம் செய்ய இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!
விசா இல்லாமல் சட்டவிரோதமாக இரண்டு நாடுகளைக் கடந்து வந்து, இந்தியாவில் காதலனை திருமணம் செய்த இளம் பெண் மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
பாகிஸ்தானில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹைதராபாதில் வசித்து வருபவர் சோஹைல் ஜீவானி. இவரது மகள் இக்ரா ஜீவானி. 16 வயது கல்லூரி மாணவியான இவர், லூடோ விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த விளையாட்டு வாயிலாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முலாம் சிங் என்ற 26 வயது இளைஞருடன் இக்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. முலாயம்சிங் தனது பெயரை சமீம் அன்சாரி என்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருவதாகவும் கூறி இக்ராவிடம் அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், உண்மையில் முலாயம்சிங் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
லூடோ விளையாட்டு மூலம் ஏற்பட்ட பழக்கம் இருவரிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதனிடையே இக்ரா, தன்னிடமிருந்த நகைகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் பணம் சேர்த்து பாகிஸ்தானில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் துபாய் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியா வந்து பெங்களூரில் சமீம் அன்சாரியை (முலாயம்சிங்) சந்தித்துள்ளார். இக்ரா ஜீவானியின் பெயரை ரேவா என மாற்றிய முலாயம் சிங், அவருக்கு ஆதார் அட்டை வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். மேலும் ரேவா பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பித்தார்.
இதற்கிடையே தனது மகளைக் காணவில்லை என சோஹைல் ஜீவானி ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஹிந்து பெண்ணாக மாறிய இக்ரா, தினமும் நமாஸ் செய்வது அக்கம்பக்க்த்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் இது பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
கர்நாடக போலீஸார் முலாயம் சிங், இக்ரா இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ரேவா பாகிஸ்தான் பெண் என்பதும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து திருமணம் செய்து வாழ்ந்துவருவதும் தெரியவந்த்து.
இதையடுத்து இக்ரா, வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வெளியுறவுத்துறை மூலம் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். முலாயம் சிங்கை போலீஸார் கைது செய்து விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.