பலூன் விற்கும் மாற்றுத் திறனாளி இளைஞருக்கு பிரியாணி கொடுத்த பாகிஸ்தானி பெண்: வைரல் வீடியோ!
பாகிஸ்தானில் தெருவோரத்தில் கிரிஷ் எனும் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த பைசா நயீம் எனும் பெண் அந்தச் சிறுவனைக் கண்டதும் தன்னிடம் மீதமாகியிருந்த பிரியாணி பாக்கெட்டைத் தருவதற்காக காரை நிறுத்தினார். பின்னர் காருக்குள் இருந்தவாறே, சிறுவனிடம் பிரியாணியைக் கொடுத்து விட்டு... பலூன் வாங்குவதற்காக விலை கேட்டார். அதற்கு கிரிஷ், ஒரு பலூன் 10 ரூபாய் என்று விற்கிறேன். ஆனால், நான் இந்த பலூன்களை உங்களுக்கு சும்மாவே தருகிறேன். காசு வேண்டாம் என்கிறான். இது அந்தப் பெண் கொடுத்த பிரியாணிக்காக அவன் நன்றி செலுத்த விரும்பிய உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணோ, அதெல்லாம் கூடாது, பலூன்களுக்காக நீ காசு வாங்கிக் கொள்ள வேண்டும். என்று கூறி அதற்குரிய காசை அவனிடம் தருகிறார். இதனால் மகிழ்ந்து போன அந்தச் சிறுவன் குழந்தைகளைக் கொஞ்சுவது போல காருக்குள் இருந்த பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிடுகிறான். சிறுவனின் இந்தச் செய்கையை வீடியோவாக அந்தப் பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஃபிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வாழ்வின் இனிமையான தருணங்கள் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இன்ஸ்டாவில் வெளியான அந்த வீடியோ தற்போது 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.
இதயங்களை வென்று மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் இது போன்ற மனித நேய வீடியோக்களைப் பார்க்கையில் அந்த மனிதாபிமான உணர்வு பார்க்கும் அனைவருக்குமே தொற்றிக் கொள்கிறது.
இது போன்ற நற்செயல்களில் ஈடுபடும் ஆர்வம் அனைவருக்குமே ஒரு எழுச்சி அலை போல எழத்தொடங்கி விடுகிறது. என்றெல்லாம் இந்த வீடியோவின் கீழ் கருத்திட்டு வருகின்றனர் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தோர்.
கூடுதலாக தற்போது நயீம் அந்தச் சிறுவனை விருந்துக்காக வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார், அந்த வீடியோவும் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் கிரிஷ் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைக் காணலாம். இந்த வீடியோவில் தனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்த நயீமை தனது வீட்டிற்கு ‘தாவத்’ செய்ய அழைக்கிறார், மேலும் விருந்தின் போது பிரியாணி, கோர்மா மற்றும் ஆலு கோஃப்தே போன்றவற்றை தந்து உபசரிக்கப் போவதாகவும் கூறுகிறார். இந்த வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.