ப்ளீஸ், உக்ரைனோடு தைவானை ஒப்பிடாதீர்கள்! எரிச்சலாகும் சீனா!

ப்ளீஸ், உக்ரைனோடு தைவானை ஒப்பிடாதீர்கள்! எரிச்சலாகும் சீனா!

ஓராண்டாக ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு தரப்பிலும் இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை.

உக்ரைன் பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருப்பதாக ரஷ்யா தொடர்ந்து பேசி வந்தது. சமீபத்தில் அதை உண்மையாக்கும்படியான செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உக்ரைனை தைவானோடு ஒப்பிடவேண்டாம் என்றும், உக்ரைன் மீதான யுத்தத்தில் தான் தொடர்ந்து நடுநிலை வகிப்பதாகவும் சீனா விளக்கம் தந்திருக்கிறது. உக்ரைனில் தொடரும் போர்ச்சூழல் தொடர்ந்து கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

உக்ரைன் யுத்தத்தை பொறுத்தவரை, ரஷ்யாவுக்கு சீனாதான் ஆயுதங்கள் தந்து உதவி செய்வதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகப்படுகின்றன. உக்ரைன் யுத்தத்தை நிறுத்தி, அமைதியை கொண்டு வருவதற்கு சீனா முயற்சி செய்யும் நிலையில் தைவான் பற்றிய சர்ச்சைகள் மீண்டும் எழுந்திருப்பதால் எரிச்சலடைந்திருக்கிறது.

சீனா, தைவான் மீது எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று உறுதியளிக்கவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் தருவதாகவும் செய்திகள் வந்தன. தைவானை மையப்படுத்தி வரும் எந்த விஷயத்தையும் சீனாவில் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு சில நாடுகள் பின்னணியில் இருந்து கொண்டு போரை தொடரக்கூடிய சூழலை உருவாக்கி வருகின்றன. இன்று உக்ரைன், நாளை தைவான் என்று விஷமத்தனமாக தொடர்ந்து பேசி வருகின்றன.

தைவன் ஒரு நாடு அல்ல. அது என்றுமே ஒரு நாடாக இருந்ததில்லை. தைவான் பிரச்னை பற்றி தெரியாமல் கருத்து சொல்லக்கூடாது என்று எரிச்சலோடு பேசியிருக்கிறார், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்.

தைவானை சுற்றி நடக்கும் சீன ராணுவ நடவடிக்கைகள் கடந்த ஓராண்டில் அதிகம் கவனம் பெற்றிருக்கின்றன. சீனாவுடனான எந்த உறவையும் தைவான் விரும்புவதில்லை. தைவான் குடிமக்கள் தங்களை "தைவானியர்கள்" என்றே கருதுகின்றனர் "சீனர்களாக" அல்ல.

1950 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன் பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. ஆனாலும், அதை தனி நாடு என்று அங்கீகரிக்காமல் சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

தைவான், சீனாவுக்கு சொந்தம் என்று பேசிவருவதோடு, தைவானுடன் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா விரும்புவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com