ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க ஹிரோஷிமா நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஜப்பான் சென்றடைந்தார். அவருக்கு ஜப்பான் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். ஹிரோஷிமாவில் உள்ள ஷெரட்டன் ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை, அங்கு கூடியிருந்த ஜப்பான் வாழ் இந்திய மக்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். அப்போது குழந்தைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில் முன்னதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு நட்புறவை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை மாநாட்டில் பங்கேற்க அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அவர் உரையாற்றினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com