நீருக்கு அடியில் வாழும் நிஜ AquaMan…!

நீருக்கு அடியில் வாழும் நிஜ AquaMan…!

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஜோசப் டிடுரி, நீருக்கு அடியில் 74 நாட்களுக்கு மேல் தங்கி சாதனைப்படைத்துள்ளார்.

மனிதர்கள் ஆபத்தான சூழ்நிலைகளின்போது அவர்களின் உடல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டதன் உளவியல் விளைவுகள் குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கான 55 வயதான ஜோசப் டிடுரி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக புளோரிடாவில் உள்ள கீ லார்கோ (Key Largo) உள்ள 30 அடி ஆழமான குளத்தில் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்ற முழுமையாக அடைக்கப்பட்ட ஒரு வசிப்பிடத்தில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். நீர்மூழ்கிக் கப்பலைப் போல் உள்ள அவரின் வசிப்பிடம் அதிகளவு நீரின் அழுத்தத்தைத் தாங்கும் வசதியற்றது. இங்கு ஜோசப் டிடுரி தன்னுடைய தினசரி பணிகளை மேற்கொண்டுள்ளார். காபி குடிப்பது, புத்தகம் படிப்பது மற்றும் ஓய்வெடுப்பது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த செயல்முறையின்போது நீரின் அழுத்தத்தினால் மனித உடலின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என அவர் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் எதிர்கால ஆழ்கடல் சோதனையின்போது பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ராணுவத்தில் ஏறக்குறைய இருபத்தி எட்டு ஆண்டு கமாண்டராக பணியாற்றிவந்தவர் ஜோசப் டிடுரி. ராணுவ பணி ஓய்வுக்குப் பிறகு உயிர் மருத்துவப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர், உயிர் காக்கும் உபகரணங்கள் வடிவமைப்பு, அதிக கார்பன் டை ஆக்சைடு சூழ்கள் உயிர் பிழைத்திருப்பது ,ஹைபர்பேரிக் மற்றும் ஹைபோபாரிக் மருத்துவம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மருத்துவ ஆராய்ச்சியாளர் மட்டுமல்லாமல், Secrets in Depth, Exploration and Mixed Gas Diving Encyclopedia: The Tao of Survival Underwater உள்ளிட்ட அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், ஏராளமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இதற்கு முன்பு இதே பகுதியில், ஆராய்ச்சியாளர்கள் Bruce cantrell and jessica fain ஆகியோர் நீருக்கு அடியில் இதேபோன்ற ஆய்வை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் நீருக்கு அடியில் 73 நாட்கள் தங்கியிருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த சாதனையை 74 நாட்களுக்கு மேல் நீருக்கு அடியில் தங்கி சாதனை புரிந்துள்ளார் ஜோசப் டிடுரி. நிலப்பகுதிக்கு வர ஆர்வமாக உள்ளீர்களா என்ற கேள்விக்கு தற்போதுவரை அந்த எண்ணம் வரவில்லை என்றும் குறைந்தபட்சம் 100 நாட்கள் வரை தண்ணீருக்கு அடியில் தங்கியிருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இந்த நிஜ AquaMan….

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com