பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சூரியனே அனைத்து உயிருக்கும் அடிப்படையாகும். சூரியனை ஆய்வு செய்துவரும் அமெரிக்காவின் நாசா, சமீபத்தில் சூரியனில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றத்தை கண்டறிந்துள்ளனர். அதாவது, சூரியனின் மேற்பகுதி உடைந்து, அதன் வட துருவத்தை சுற்றி ஒரு சூறாவளி போன்ற சுழற்சியை ஏற்படுத்தி உள்ளது ஆய்வாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதை ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "சூரியனில் வடக்கே முக்கியப் பகுதி பிரிந்து வட துருவத்தைச் சுற்றி பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது. சூரியனில் ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
சூரியனின் மேற்பரப்பு வெளிப்புறமாக சில சமயம் விரிவடையும். கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் பல நடந்துள்ளன. ஆனால், இம்முறை அது தனியாக வந்து பெரிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது ஆய்வாளர்களை திகைக்க வைத்துள்ளது. பல ஆண்டுகளாக சூரியனை ஆய்வு செய்துவரும் அமெரிக்க தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ஸ்காட் மெக்கின்டோஷ் கூறுகையில், "சூரியனில் முக்கியமான ஒரு பகுதி உடையும்போது இவ்வளவு பெரிய சூழல் ஏற்படுவதை நான் எப்போதுமே பார்த்ததில்லை" என்று கூறுகிறார்.
இந்த சூரிய உடைப்பால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தபோதும், இம்மாத தொடக்கத்தில் சூரியனில் இருந்து வந்த சக்தி வாய்ந்த சோலார் ப்ளேர் பூமியின் தகவல் தொடர்பை தற்காலிகமாகத் துண்டித்தது போன்று அவ்வப்போது சூரியன் பல ஆச்சரியங்களை மனிதனுக்குக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளது.
சூரியனின் ஒரு பகுதி உடைந்து தனியாகப் பிரிந்துள்ளதால் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்காக வாய்ப்புகள் எதுவும் இருப்பதாக இதுவரை ஆய்வாளர்கள் எதையும் கண்டறியவில்லை. மாறாக, அவர்கள் மத்தியில் குழப்பமே அதிகரித்து வருகிறது. இருப்பினும், சூரியனின் காந்தப்புல தலைகீழ் மாற்றத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்திலும் ஆய்வாளர்கள் சந்தேகின்றனர். அதாவது, ஒவ்வொரு பதினொரு ஆண்டுகளுக்கும் ஒரு முறை சூரியனின் காந்தப்புலன் தலைகீழாக மாறும். அதற்கும் இப்போது ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற அடிப்படையிலும் ஆய்வுகள் சென்று கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.