செல்போன் பயன்படுத்துவதால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து! ஆய்வில் வெளிவந்த உண்மைகள்.
பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தினசரி 3 மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பதின்பருவ வயதினருக்கு ஒரு பொதுவான பாதிப்பு ஏற்படும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் பள்ளி செல்லும் பதின்பருவ (14-18) வயதான ஆண் அல்லது பெண் பிள்ளையோ இருக்கிறார்களா? ஆம் எனில் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்காகத்தான். பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் பதின்பருவ வயதினர், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பொதுவான பாதிப்பை கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, செல்போன் ஸ்கிரீனை நீண்ட நேரம் பார்ப்பது, மொபைல் போனுக்கும் கண்களுக்கும் இடையேயான தூரத்தை குறைவாக வைத்திருப்பது, வயிறு கீழே இருக்கும் படி படுப்பது மற்றும் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது போன்ற செயல்களால் முதுகெலும்புப் பிரச்சனை ஏற்படும் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆய்வில், மேற்கூரிய செயல்களில் ஈடுபடும் இள வயது பிள்ளைகளுக்கு, தொராசிக் முதுகெலும்பு வலியானது ஏற்படும் என்கிறார்கள். மார்பின் பின்புறத்தில் தான் தொராசிக் முதுகெலும்பானது அமைந்துள்ளது. இது தோல்பட்டைக்கு இடையே, கழுத்தின் அடியிலிருந்து இடுப்புவரை நீண்டிருக்கும். ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட மொபைல் போன் தொடர்பான உடல்நல பாதிப்புகளைக் கண்டறியும் ஆய்வில், நேரடியாக பள்ளி குழந்தைகளே ஈடுபடுத்தப்பட்டனர்.
2017ல், இதில் பங்குபெற்ற 1628 மாணவர்களிடமும் சில அடிப்படை கேள்விகள் அடங்கிய வினாத்தாள் கொடுக்கப்பட்டு, அவற்றிற்கு பதில் எழுதும்படி சொல்லப்பட்டது. 2018ல் முன்னர் பங்குபெற்ற மாணவர்களில் 1393 நபர்களிடம், அதற்கு அடுத்த கட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டு அதற்கான பதில்களும் பெறப்பட்டது.
ஆய்வாளர்களுக்கு கிடைத்த இரண்டு பதில்களையும் பகுப்பாய்வு செய்ததில், முதலில் கிட்டத்தட்ட 38 சதவீதம் பேர் தொராசிக் முதலெழும்பு வலியால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும், ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 10 சதவீதம் பேர் புதியதாக முதுகெலும்பு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில், மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தொராசிக் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எவ்வளவு நேரம் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
தொராசிக் முதுகெலும்பு வலியானது 14-18 வயதினருக்கு மட்டும் தான் வருமா எனக் கேட்டால் இல்லவே இல்லை. இது எல்லா தரப்பு வயதினருக்கும் வரும் ஒரு பொதுவான உடல் நலப் பிரச்சனையாகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 15% - 35% பெரியவர்கள் இந்த முதுகெலும்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் ஒரு தரவு சொல்கிறது. கோவிட் காலகட்டத்திற்குப் பிறகு மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், தொராசிக் முதுகெலும்பு பிரச்சனை மேலும் அதிகமாகியுள்ளது.
எனவே, பள்ளி குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினரும் செல்போன் பயன்படுத்துவதில் இனி கவனமாக இருக்க வேண்டும்.