
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கராச்சியில் பாதுகாப்பான பகுதியில் வசித்து வருகிறார். அதிர்ச்சி தரும் இந்த தகவலை அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாவூத்தின் மறைந்த சகோதரி ஹஸீனா பார்கரின் மகன் அலிஷா இப்ராகிம். இவரிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பதான் இனப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், இரண்டாவது மனைவியுடன் தாவூத் எங்கு தங்கியிருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், தாவூத் முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் அவரது முதல் மனைவி மெஹ்ஜாபீன், மும்பையில் உள்ள உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அலிஷா இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
எனினும், பாகிஸ்தானில் வசித்துவந்த தாவூத் இப்ராகிம் கராச்சியில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான பகுதியில் தமது வீட்டை மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் தாவூத் இப்ராகிம் கஸ்கர், ஒரு காலத்தில் ஹாஜி மஸ்தான் கோஷ்டியில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்தார். மஸ்தான் அரசியலில் நுழைந்ததை அடுத்து மும்பை தாதாவாக தாவூத் உருவானார். பின்னர் தனக்கென ஒரு பெரிய கோஷ்டியை உலகம் முழுவதும் உருவாக்கி செயல்பட்டு வந்தார். 1983ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு மற்றும் இதர பயங்கரவாதச் செயல்களுக்கு பண உதவி செய்து, சதி வேலையில் ஈடுபட்டு வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
மும்பையில் இருந்தபோது மெஹ்ஜாபீன் என்ற பெண்ணை தாவூத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மஹ்ரூக் இப்ராகிம், மெஹ்ரீன் இப்ராகிம், மரியா இப்ராகிம் என மூன்று மகள்கள் மற்றும் மொயின் என்ற மகனும் உண்டு. மூன்று மகள்களில் மஹ்ரூக் இப்ராகிம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தாத்தின் மகன் ஜூனைத்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மகள்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பிறகு ஹஸீனா பார்கர் மும்பையில் தாவூத் கோஷ்டிக்கு தலைமை வகித்து வந்தார். அவளது கணவரை தாவூத்துக்கு எதிர் கோஷ்டியைச் சேர்ந்த அருண் காவ்லி கோஷ்டியினர் 1991ல் சுட்டுக் கொன்றனர். பின்னர், 2014ஆம் ஆண்டில், தமது 55வது வயதில் ஹஸீனா திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். ஹஸீனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு மும்பை பட உலகில் 2017ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.