பெருவில் அதிர்ச்சி சம்பவம்! பறவைக் காய்ச்சலுக்கு 585 கடல் சிங்கங்கள் பலி! யாரும் நெருங்க வேண்டாம் என எச்சரிக்கை!
தென்அமெரிக்க நாடான பெருவில் பறவைக் காய்ச்சலுக்கு 585 கடல் சிங்கங்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டில், பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் 55,000 பறவைகள் இறந்துள்ளதாக, செர்னான்ப் இயற்கைப் பகுதிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பாதுகாக்கப்பட்ட 7 கடல் பகுதிகளில் 585 கடல் சிங்கங்களும் இந்த பறவைக் காய்ச்சலுக்கு பலியானதை ரேஞ்சர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இறந்த பறவைகளில் பெலிகன்கள், பல்வேறு வகையான காளைகள் மற்றும் பெங்குவின் ஆகியவைகளும் அடங்கும் என்று செர்னான்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆய்வக சோதனைகளில், இறந்த கடல் சிங்கங்களில் H5N1 இருப்பதை உறுதிசெய்ததையடுத்து, கடற்கரைகளில் உள்ள கடல் சிங்கங்கள், கடல் பறவைகள் அருகே நெருங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு தேசிய வனவிலங்கு சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, பறவைக் காய்ச்சல் காரணமாக, அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில், கோழிப்பண்ணையில் 37 ஆயிரம் பறவைகளை அழித்ததும் குறிப்பிடத்தக்கது.