உடன்பிறப்புகள் தினம் – ஏப்ரல் 10

உடன்பிறப்புகள் தினம் – ஏப்ரல் 10

ம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர் .அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே .எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும் எவ்விடத்திலும் எவரிடத்தும் விட்டுக்கொடுத்து விடாமல் நம்மைப் பாதுகாப்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பதில் வல்லவர்கள் நம்முடன் பிறந்தவர்கள் என்றால் மிகையல்ல. அவர்களுக்காக ஒரு தினமாக இன்று ஏப்ரல் 10 ம்தேதி கொண்டாடப்படுகிறது. 

     இந்த தினத்தை நாம் கொண்டாடக் காரணமானவர் அமெரிக்காவை சேர்ந்த கிளவுடா எவர்ட் என்பவர்தான். அமெரிக்காவின் மான்ஹட்டனை சேர்ந்த இவர் தனது பாசத்துக்குரிய உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்து விட்டார். அவர்கள் மீது அளவற்ற அன்புடன் இருந்த கிளவுடா அவர்களை மறவாமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அனைவரும் உடன் பிறப்புகளுடன் பாசத்துடன் இருக்க வலியுறுத்தவும் 1995 ஆம் ஆண்டு உடன்பிறப்புகள் தின அறக்கட்டளையை நிறுவி அதை கிளவுடா தொண்டு நிறுவனமாக்கி பல சேவைகளை செய்தார். அதுமட்டுமின்றி இந்த நாளை அரசும் அங்கீகரிக்க வேண்டி அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை சந்தித்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். 

    இவரது இடைவிடாத முயற்சியின் பலனாக அமரிக்கா வின் மாகாண ஆளுநர்கள் அதிபர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதனை வரவேற்று முன்மொழிய அதன் பின்னே ஆண்டு தோறும் ஏப்ரல் 10ம் தேதியான இன்று உடன்பிறப்புகள் தினமாக கொண்டாட அனுமதிக்கப் பட்டது. துவக்கத்தில் இதன் மீதான கவனம் அதிகமாக மக்களிடம் இல்லை எனினும் தற்போது இந்த உடன் பிறந்தோர் தினம் உலக அளவில் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

     குடும்பத்தில் ஒற்றை வாரிசாக பிறந்து இருந்தாலும் சித்தி சித்தப்பா அத்தை பெரியம்மா என உற்ற சொந்தங்களின் வாரிசுகளை உடன்பிறப்புகளாக ஏற்றுக்கொண்டு மகிழ்பவர்களும், அண்ணன் தம்பி இல்லாத பெண்களும் ஆண்களும் சமூகத்தில் தங்களை அன்புடன் ஆதரிக்கும் தங்கள் மனம் விரும்புவோரை சகோதர்களாக ஏற்று அவர்களிடம் அன்பைப் பொழிவதும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இதில் சாதி மதம் வயது வித்யாசம் இன்றி அனைவரையும் சகோதர பாசத்துடன் அணுகுபவர்களை இந்த சமூகமும் உச்சத்தில் வைக்கிறது.

    ’தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். நமக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அடுத்த நிமிடம் ஓடி வந்து தோள்தருபவர்கள் நம்முடன் பிறந்தவர்களே என்பதில் எவருக்கும் சந்தேமில்லை.

     ஆயினும் தற்போதுள்ள இந்த கலிகாலத்தில் பெரும்பாலான வீடுகளில் சொத்துக்காக உடன் பிறந்தவர் களையே புறம் பேசி விலக்குவதும் ஏன் கொலை செய்வதும் கூட நிகழ்கிறது. கூட இருந்தே குழிபறிக்கும் பொறாமையை விலக்கி என்றும் நம் உடன்பிறந்தோரை மதித்து அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழ்வதே நம் பிள்ளைகளுக்கு உறவுகளின் உன்னதம் குறித்து நாம் காட்டும் வழியாக இருக்க முடியும். 

       கருவறை முதல் கல்லறை வரை நம் சுக, துக்கங்களில் பங்கேற்று நம் உணர்வுகளில் ஒன்றி இருக்கும் உடன் பிறந்தோரை இந்த நாள் மட்டும்மல்லாமல் உயிருடன் உள்ளவரை ஆதரித்து அன்பு செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com